பக்கம்:அலைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆஹுதி O 63

குஞ்சம் கொடி பறந்தது. அந்த உன்மத்தத்தோடேயே ஒடி வந்தது. ஒரு மரத்தை முட்டிற்று. கிழமரம் முழுவதும் புல்லரித்துக் கிளைகள் குலுங்கின. ஆனந்த பாஷ்யத்தில் புஷ்பங்களும் இலைகளும் உதிர்ந்தன.

அவ்வெறியிலேயே காளை அப்படியே திரும்பி, திடுதிடுவென பூமியதிரச் சறுக்கிக்கொண்டே வெகு வேகமாய்க் கானாறில் இறங்கிற்று. நுரை கக்கி சுழித்தோடும் ஜலத்தைக் கிழித்துக் கொண்டு, எதிர் நீச்சலில் வெள்ளத்தில் நுழைந்து ஜலத்தைக் கலக்கி நன்கு துளைந்த பின் தலை உதறி உடம்பைச் சிலிர்த்தவண்ணம், எதிர்க்கரைக்கு ஏறுகையில் இரு பக்கங்களிலும் ஜல ஸ்படிகங்கள் விசிறி உடைந்து பூமியில் சிதறின. மேனி மின்னிற்று. கல்லுருண்டை போன்ற திமில்மேல், அழகுகள் புடைத்து வழிந்து விளையாடின. சிந்தாத தன் ஆண்மையின் தூய்மையில் அது ரிஷிகுமாரன் போல் ஜ்வலித்தது. நீண்ட கொம்புகள், அஞ்சலியில் எழுந்த கைகள் போலும் ஒன்றையொன்று நோக்கி வளைந்தன.

கரைமேல் ஓங்கிய அரசின் கீழ் அது படுத்துத் தன் அசையை மெல்லத் துவங்கிற்று. எதிர் விரிந்த புல்வெளிகளின் மேல் படர்ந்து சாயும் இரவில் இருளில் திமில் ஓங்கித் திமிர்த்து நின்றது. அதன் உச்சியில் நட்சத்திரங்கள் தங்கி இளைப்பாறின. காளை கண்ணயர்ந்தது.

அடிவானம் செவ்வானமாகி வரும் பின்னணியில் ரிஷபம் தன் கண் திறப்பின் முதல்விழிப்பாய் அக்குன்றை விடிவில் கண்டதும் அதன் விழி புது விழிப்புக் கண்டது. புரியாத ஆவல் உந்த, காளை எழுந்து குன்று நோக்கி நடந்தது. புல் வெளிகளைக் கடந்து நெருங்க, நெருங்க, மலைக் குன்றை அவைகளின் முழுமையில் காண்கையில் அண்டப் பட்சிகள் குதறியெறிந்த பிரும்மாண்டமான பழம் போல் சிறு குன்றுகள் சிதறிக் கிடந்தன. அவை மேல் செடிகளும் சில மரங்களும் தலைகளை ஆட்டி ஆட்டி விருந்தாளியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/65&oldid=1287254" இலிருந்து மீள்விக்கப்பட்டது