பக்கம்:அலைகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62 O லா. ச. ராமாமிருதம்


சீக்கிரமே அது தன் முழு வளர்ச்சியை அடைந்தது. அவ் விடத்தின் செழுமையோ, அதன் தாய்ப் பாலின் மகத்துவமோ அதன் சொந்த மகிமைதானோ. அதனின்று வெளிப் பட்டு அதனைச் சூழ்ந்த காம்பீர்யத்தின் நடுநாயகமாய் அது திகழ்ந்தது. அதன் தோற்றம் கம்பீரம் என்று மாத்திரம் முடிப்பதில் முழுமையில்லை. அதனை ஒரு தனி சமூகம். பிரசன்னம், விலாசம் விசாலித்தது. வெள்ளமோ தீயோ பரவி வருகையில் இடத்தை வெறுமென அழித்துக் கொண்டு மாத்திரம் வருவதில்லை. தமதாகவே ஆக்கிக்கொண்டு விடுகின்றன. அவ்விதம் தான் புழங்கிய இடத்தை, தான் என்ற-தனி நினைவற்ற தன் ஒருமையின் தனிமையில் அத்துடன் இழைந்து தனதாக்கிக்கொண்டு விட்டது.

வயிறு புடைக்க மேய்ந்துவிட்டு, அந்தி வேளையில் செஞ் ஜோதியில், தானே வேள்விக் குண்டத்திலிருந்து சரிந்த பெரியதோர் கொள்ளிபோல் ஒளிமயமாகித் தொலைவில் மலைக் குன்றிற்கப்பால் அடிவானத்தைப் பொக்கை வாயில் மென்று குதப்பிக்கொண்டே மெதுவாய்ப் புதையும் சூரியனை, வியப்புடன் நிமிர்ந்து நோக்கியபடி-அத்தனை தாவரங்களின் நடுவே தான் மாத்திரம் தனி நடை உயிராய் லயித்து நிற்கையில், அடவியின் மரங்களும் குன்றும் எல்லாமே அதற்கெனவே அது காணும் முறையில் அதன் ஆட்சியுள் அடங்கின.

அங்கு எப்பவுமே சூழ்ந்த மோனாகாரம் ஒரோரு சமயம், தாய் விலங்கு தன் குட்டியைக் கவ்வுவதுபோல், அதன் அகண்டவாயில் அதைக் கவ்வுகையில், காளையின் இதயத்தில் புரியாத சாயா ரூபங்கள் தோன்றின. தலையை உதறிக்கொண்டு, உடலை நெறித்து, ஒன்றும் புரியாத களிவெறியில் வெகுவேகமாய் நாலுகால் பாய்ச்சலில் ஒடுகையில் அதன் குளம்புகள் தவறற்ற தாளத்தில் பூமியில் பட்டுப் பட்டெழுகையில், யெளவ்வனத்தின் ஜய பேரிகை முழங்கிற்று. நிமிர்ந்து வளைந்து நிமிர்ந்த வால் நுனியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/64&oldid=1287253" இலிருந்து மீள்விக்கப்பட்டது