பக்கம்:அலைகள்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அலைகள் O 213


வோட்டத்தில் திரவியங்கள், ஞாபகங்கள், எண்ணங்கள் , சம்பவங்கள் பிதுங்கி, கழன்று, தம்மைத் தாமே சுழன்று, மிதந்து செல்கின்றன.

இப்போது பாதாளம் தன் அடிவயிற்றில் பதுக்கி வைத்திருக்கும் புதையல்களும், சப்தரிஷிமண்டலம் ஏர்பூட்டி ஆகாயத்தை உழுது. அதைச் சுற்றிச் சிதறி கிடக்கும் மணிக் கற்களும், பூப்பொறிகளும் பொன்விதைகளும் ஒன்று கலந்து அவை நடுவே நான் திளைக்கிறேன். ஒவ்வொரு எண்ணமும் ஒரு நஷத்திரச்சுடர். ஒவ்வொரு உணர்ச்சியும் ஒவ்வொரு ஞாபகமும் ஒரு சதங்கைமணி-கல் கல் கலீர் கிண் கிண் கிண் கிணி ஒவ்வொரு சம்பவக் கோர்வையும் ஒரு மலர்ச்சரம். இங்கு பகையென்பதேயில்லை. பகைகூட. நாகம் கக்கிய நாகமணியாய்ப் பொலிகிறது.

ஆனால், நானே என் தன்மையில் பகை பாராட்டுபவனல்ல என இப்பொழுது நிச்சயமாய்த் தெரிகின்றது. நெஞ்சில் வைத்துக்கொண்டு நஞ்சாய்ப் புகையுமளவுக்கு எனக்கு நெஞ்சில் அழுத்தமில்லை. அப்பாகூட கவலைப்படுவார். மாதவா, புற்றுமண்ணாய்ப் பிசுபிசுக்கும் மனசை வைத்துக்கொண்டு நீ எப்படித்தான் உலகத்தில் பிழைக்கப் போகிறாயோ? போவோர் வருவோர் எல்லாம் உன் தலையைத் தடவித் தடவி நீ உருப்படுவதெப்போ?’’

அம்மா அடுப்பங்கரையிலிருந்து வெளிப்படுகிறாள். ஒரு கையில் தட்டில், வெங்காய பஜ்ஜியின் வாஸனையும், மறு கையில் டம்ளரில் ஆவிபறக்கும் காப்பி மணமும் கலந்து எனக்குத் தலை லேசாய் சுற்றுகிறது.

ஆமாம் உங்களுக்கும் எனக்கும் என்ன வந்தது? நம் பிள்ளையை நாளுக்கும் நாமே அடைகாத்திண்டிருக்க முடியுமா? அதனதன் தலையில் ஆண்டவன் எப்படி கிறுக்கியிருக்கானோ அப்படித்தானே நடக்கும்! கெட்டிக்காராள் எல்லாம் என்ன கயட்டிப்பிட்டா?’’

அ,-14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/215&oldid=1285553" இலிருந்து மீள்விக்கப்பட்டது