பக்கம்:அலைகள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணன் O 151


காலில் முள்குத்தித்தே, அது மாதிரியிருந்தது-அதைவிட சுறீல்-

"ஆமாண்ணா, எங்கேண்ணா போவேன்? குழந்தையும் கையுமாய் நிக்கறேன்-"

"பேஷ் சுமை வேறையா?-’’

"அண்ணா சாப்பிட்டு ரெண்டு நாளாறது...”

அப்புறம் அதிகமாய் ஞாபகமில்லை. ஏதோ உள்ளே போய் ஒரு கந்தையை அம்மா அவன்மேல் சுற்றினாற் போலிருந்தது.... அப்புறம் சாப்பிட்டாற்போலிருந்தது பழையது. அப்புறம் துக்கக்கலக்கம். கூடம் தூண், கூடத்திலே மாட்டியிருக்கிற படமெல்லாம் ஒரே சுத்தல், நடுவில் நடுவில் மாமாவுக்கும் அம்மாவுக்கும் வார்த்தைகள்-துணுக்குகள்-தண்ணியிலே பேசறாப்போல...

"சரி, இந்த ருக்மிணியைத் தூக்கிண்டு போன அந்தக் கிருஷ்ணன் எங்கே? இப்போ சத்ய பாமையைத் தேடிண்டு போயிருக்கானா?”

அம்மா ஏன் தேம்பி தேம்பி அழறா? அம்மா அழாதேம்மா, எனக்கும் அழுகை வரது பயமாயிருக்கு அழாதேம்மா-

"அண்ணா சொல்லாலே வதைக்காதே அவா போயிட்டா. ஒரு நாள் சாயந்திரம் வேலை செஞ்சுட்டு மாரடைக்கறதுன்னு உட்கார்ந்தா. தீர்த்தம் கொண்டு வரத்துக்குள்ளே அப்படியே தூணிலே சாஞ்சுட்டா-"

"மாப்பிள்ளை எந்த ஆபீசுக்குப் போயிட்டு வந்தாரோ?’’

"ஹோட்டல்லே வேலை." அம்மா குரல் கொஞ்சம் வெடிப்பாத்தான் வந்தது. "வேறே உத்யோகம் கிடைச்சிருந்தால் தேவலைதான்-"

“ஆங்காரத்தைப் பார். ஆங்காரம் என்னவேண்டிக் கிடக்கு? எங்கள் மூக்கை அறுத்து வெச்சையேடி பாவி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/153&oldid=1288540" இலிருந்து மீள்விக்கப்பட்டது