பக்கம்:அலைகள்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196 O லா. ச. ராமாமிருதம்


அவள் தப்பியோட வழியில்லை. முன்னும்பின்னும் பக்கங்களிலும், பாறைகள் மதில்கள் போல் எழும்பித் தடுத்தன. விலக்க முடியா விதியை ஏற்கும் விரக்தியுடன், பயத்தின் குளிர்விட்டு, அவனது ஆண்மையின் சீறலை எதிர் பார்த்துக் கொண்டு அவள் நிற்பதை, அவன் கண்டான். அவன் கண்களில் ஜ்வாலைகள் கிளம்பின. பிடறி விசிறி போல் சிலிர்த்தது. அவளிடம் தாவுகையில் அவளே ஆகாயத்தில் பறப்பது போலிருந்தது.

***

ளவேனில் கோடையாய் முதிர்ந்தது. நாளடைவில் வேகமும் விறுவிறுப்பும் குறைந்து, நடை தளர்ந்து, உடல் கனத்து, அவள் பாதம் பூமியில் பதிவதைக் கண்டான். ஆயினும் இந்த அயர்ச்சியிலும் ஒரு கவர்ச்சி. இந்தக் கனத்திலும் ஒரு மினுமினுப்பு, இந்த மெதுவிலும் ஒரு திமிர். அவனை அவள் இப்பொழுது நாடவுமில்லை. விரும்பவுமில்லை. தன்னில் தானே நிறைந்திருந்தாள். அவனை வேணுமென்றே ஒதுங்கியும் நின்றாள்.

பிறகு, ஒருநாள் மாலை அலைந்து திரிந்துவிட்டு வாழுமிடம் திரும்புகையில், அவள் மடியில் ஒரு சிசு, பால் குடிப்புதைக் கண்டான். அவன் நெஞ்சு நைந்தது. என்னதான் உயர் குலமாயினும் பெற்ற மனந்தானே! ஆனால் அவளுடைய மூர்க்கம் புரியவில்லை. குழந்தையினிடமிருந்து விடுவித்துக் கொண்டு ஓடிவந்து, அவனை முட்டியுதைத்து வீழ்த்தினாள். எதிர்பாராத வேளையில் அவள் தாக்கிய வேகத்தில், அவன் கால் சறுக்கிப் பாறையின் உயரத்தினின்று உருண்டு புரண்டு விழுந்தடித்துக் கொண்டு கீழே வந்து சேர்ந்தான். எழுந்ததும் உடல் மண்ணைத் தட்டிக் கொண்டு, வந்த கோபாவேசத்தில் அவளைச் சம்ஹாரம் பண்ணி விடுவதென்றே புறப்பட்டான். ஆயினும், அறிவு வந்து சமயத்தில் தடுத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/198&oldid=1290276" இலிருந்து மீள்விக்கப்பட்டது