பக்கம்:அறிவுக்கு உணவு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.ஆ. பெ. விசுவநாதம்

27


பழியும் புகழும்

நீ பழியை விரும்பினால் திருமணத்தை முடித்துவைக்கும் பேச்சுகளில் கலந்துகொள்; புகழை விரும்பினால் திருமண வீட்டு வேலைகளுள் கலந்துகொள்.


விழிப்பாயிரு!

சாம்பிராணி போட்டுக் கடை பூட்டுகிறவர்களும் விளக் கேற்றி வைத்து விட்டு வீடு பூட்டுகிறவர்களும் சிறிது விழிப்பா யிருக்க வேண்டும; அகல் விளக்கில் எரியும் திரியை ஒர் எலி இழுத்துப் போகுமானால், வீடு பற்றி எரிய அது ஏதுவாகிவிடும்.


வஞ்சகனது உள்ளம்

நேரான பாதையில் நெஞ்சு நிமிர்ந்து நடக்கும் நேர்மை யானவனுடைய நடையைக் கண்டு, தவறான பாதையில் அஞ்சி அஞ்சி நடக்கும் வஞ்சகனது உள்ளம் படும் துன்பம், கொலை யுண்ணும் துன்பத்திலும் கொடிதானதாயிருக்கும்.


உதவி

உதவி செய்யுங்கள் என்று கேட்பவர்களுள், பத்து பேரில் ஒன்பது பேர் ஏமாற்றுக்காரர்களாய் இருக்கிறார்கள். உதவி செய்பவர்களுள் பத்தில் ஐந்து பேர் ஏமாறிப் போய்விடுகிறார்


வாழ்வும் அழிவும்

சகிப்புத் தன்மையும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் எல்லோருக்கும் வேண்டுபவை. ஆனால், அது வாழ்ந்து கொண்டிருப்பவனிடத்தில் பெருந்தன்மையாகவும், அழிந்து கொண்டிருப்பவனிடத்தில் ஏமாளித்தனமாகவும் காட்சி அளிக்கும்.


இழந்தவனை இழக்கும்

அனுபவம் என்பது தொட்டு, கெட்டு, பட்டு அறிந்து பெறுகிற உயர்ந்த செல்வம். இதை இழந்தவனைச் செல்வம் இழந்து விடும்.