பக்கம்:அவள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18 லா. ச. ராமாமிருதம்

உலகுக்கெல்லாம் ஒரே தொப்புள் கொடி.

அங்கு விட்டு அகல்கிறேன். இந்தப் பிணைப்பின் நம்பிக்கையுடன் என் நாள் துவங்குகிறது.

எனக்குப் பத்து பன்னிரண்டு வயதிருக்கும்.

ஒரு சமயம், மாலை.

சென்னையிலிருந்து, லால்குடி வந்து இறங்கியதும், முதல் காரியமாய், அண்ணாவுடன் - அப்பாவை அண்ணாவென்று அழைப்போம் - கோவிலுக்குப் போனதும் அம்மன் சன்னிதியில் நாங்கள் நின்றதும்.........

"ராம், இவள்தாண்டா நம் சொத்து, நம் எல்லாமே இவள்தான்' என்று அண்ணா சொன்னது, இன்னமும் செவியில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஏன் கண்ணைத் துடைத்துக்கொள்கிறார்? எனக்கு வியப்பாயிருக்கிறது. (கொஞ்சம் சிரிப்பும் கூடவோ?) அந்தத் தருணத்தையறிய அப்போது நான் தக்கனாயில்லை. அல்ல, இப்போ மட்டும் என்ன செய்கிறோம்? நேரங்களை வாழ்வின் ஜபமணிகளாக அடையாளம் கண்டுகொள்ளாமல், அல்ல தெரிந்தும், அவை விரலுக்கிடையே மணலாகவே சரிந்து விடுகின்றன.

அண்ணாவின் நம்பிக்கை பொறாமையாய் இருக்கிறது.

அம்மா சமாச்சாரம் வேறு. அண்ணா மாதிரி அவள் கரைந்துபோவள் அல்லள். அவளுக்குக் கோயிலுக்குப் போய்ப் பழக்கமில்லை. போனால் வெறுமென கை கூப்புவளே ஒழிய, நமஸ்காரம் பண்ணியதாக எனக்கு நினைவு இல்லை. அம்மா நமஸ்காரம் பண்ணினாலும் பாந்தமாயிருக்காது என்றே என்னுள் ஒர் எண்ணம். அவளுக்குப் பிறர் பண்ணித்தான் பார்த்திருக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/62&oldid=1496242" இலிருந்து மீள்விக்கப்பட்டது