பக்கம்:அஞ்சலி.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

210 லா, ச. ராமாமிருதம்

கெட்டியாய் பிடிச்சுக்கிட்டுது. “நீ என் குழந்தையை உசிரோடு எடுத்து என் வீட்டிலே கொடுத்தப்புறம், அவனும் உசிரோடு இருந்தால், அவன் உயிரோடிருப்பான் —அவனுக்கு புத்தி வரவரைக்கும் நீயும் உசிரோடிருந்தால், அது பத்து வருஷமானாலும் சரி, பதினஞ்சு வருஷ மானாலும் சரி—நீ அவனைத் தனியாகக் கண்டு நிஜம்மா நடந்ததைச் சொல்லணும். தெரிஞ்சுதா? அவன்மேல் நான் எவ்வளவு ஆசையாயிருந்தேன்னு நீ அவன்கிட்டே சொல்லனும். நான் அவன்கிட்டே போயிட்டு வரேன்னு சொல்லிட்டேன்னு சொல்லு அவனை நான் சமத்தா இருக்கணும்னு சொன்னேன்னு சொல்லு—”

“அப்புறம் உன் ஆத்தா பேசவுமில்லே. கண் திறக்கவுமில்லே. ஆனால் உன் ஆத்தாளைத் தெய்வம்னுதான் சாெல்லணும். இல்லாட்டி அது சொல்லச் சொன்னதை இத்தனை நாளாயும் உன்னிடம் சேர்த்துடறவரைக்கும் நான் உசிரோடிருக்க முடியுமா?—”

“வெகுநேரம் நான் உட்கார்ந்த இடத்தை விட்டு அசையவில்லை. அன்று நான் புதிதாய்ப் பிறந்தேன். அன்று நான் ஒரு ப்ரதிக்ஞை பண்ணிக்கொண்டேன். “நான் சமத்தாயிருப்பேன். பெரியவனானால் டாக்டருக்குத்தான் படிப்பேன். எத்தனையோ தாய்மார்கள் தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் என்னிடம் சிகிச்சைக்கு வருகையில், அவர்களிடம் என் தாயின் உயிரையும் பேரையும் திரும்பத் திரும்பக் காப்பாற்றுவேன்—”

“ஆனால் நான் காண்பது என்ன? ஒருவருக்கும் வாழ்க்கையில் மரியாதையில்லை. மறுப்புத் தானிருக்கிறது. பெற்று எறிந்துவிட்டால் மாத்திரம் ஆகிவிட்டதா?—”

“ஹா—ஹா—ஹா ஆஆஆஆ!” உள்ளிருந்து ஒரு பெறும் அலறல் கிளம்பிற்று. நான் துடித்து எழுந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/220&oldid=1033508" இலிருந்து மீள்விக்கப்பட்டது