பக்கம்:அஞ்சலி.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168 லா. ச. ராமாமிருதம்

அடையாளம் தெரியல்லே. கோரைப்புல் ஒவ்வொண்ணும் காத்தில் ஆடிப் புஸ் புஸ்ஸுனு சீறித்து. வீட்டை விட்டுப் பத்தடி நடக்காவிட்டாலும் எனக்கு வழி தப்பிப் போயிடுத்துன்னு மனஸாலே ஒரு எண்ணம் பட்டுப் போச்சு. இந்த வழி மாத்திரமில்லே, இன்னும் எந்தெந்த வழியெல்லாமோ, ஊரிலே உலகத்திலே எனக்கிருக்கற வழியெல்லாமே தப்பிப்போச்சு—”

அம்மா புனையும் பழைய நினைவுகளின் கோர்வை, புலியின் கழுத்தில் அசைந்தாடும் பூமாலைபோல், சோக பயங்கரத்துடன் காவிய அழகுடன் மிளிர்ந்தது

“நீங்கள் எவ்வளவு கல்லாலடிச்ச மாதிரியிருந்தாலும் நான் செஞ்ச காரியம் சரியில்லேன்னு பட்டுப் போச்சு. அவ்வளவுதான் அழுகை வந்துடுத்து.

“அப்போ பாருங்கோ—திடீர்னு ஒரு காத்து கிளம்பித்து—”

அம்மா அப்படிச் சொன்னதும் அவள் சொல்லுக்குக் காத்திருந்த மாதிரி காற்று எங்கிருந்தோ புயலாய்ச் சுழித்துக்கொண்டு கிளம்பிற்று—

அம்மாவின் குரல் உயர்ந்தது.

“ஆயிரங் கைகள் சேர்ந்தாற்போல் எழுத்து தடுக்கறாப்போலே என்னைப் பின்னுக்குத் தள்ளிண்டே போச்ச—”

அம்மாவின் வார்த்தைகள் எனக்குச் சரியாய்க் கேட்கவில்லை. நானே என் வசமில்லை. எழுந்து அவசர அவசரமாய் அப்பாவின் அறைப்பக்கம் ஒடினேன். ஜன்னலின் கதவுகள் காற்றில் படபடவென அடித்துக் கொண்டன.

அம்மாவின் வார்த்தைகள் இப்பொழுது தீவிரமாய் அறையிலிருந்து வெளிவந்தன. நான் வெளியில் நின்று கேட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/178&oldid=1033480" இலிருந்து மீள்விக்கப்பட்டது