பக்கம்:அஞ்சலி.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காயத்ரீ 151

சட்டெனப் பூட்டு விட்டுத் தளர்ந்தன. அப்படியே கர்ணம் அடித்துக்கொண்டே வெகு வேகமாய்க் கீழிறங்கி மொத்தாகாரமாய்ப் ‘பொத்’தென என் மடியில் வீழ்ந்தது.

நான் “ஓ”வென அலறினேன். என் கைகள் வெட வெடத்தன. என் விரல்கள் தற்செயலாய் அதன் மார்பில் சற்று அழுந்தின. அவ்விதயத்தின் கடைசித் துடிப்பு அப்பொத்தான் அந்த உடலை விட்டுப் பிரிந்துகொண்டிருந்தது பிராணனின் கடைசிப் பிரயத்தளத்தில் அதன் பார்வை என்மேல் நிலைக்க முயன்றது. அக்கண்களில் தவித்த ஆச்சரியத்தையும், சோகத்தையும் வலியையும் நான் மறக்கவே முடியாது. அதன் உடல் ஒரு குலுங்கு குலுங்கிப் புரண்டது. உடனே கட்டையாகிவிட்டது. உடையும் தேங்காயில் திடீரென உதயமாகும் அவ்வளவு தூய வெண்மை. அதன் துடிப்பிழந்து அந்த வெண்மையை வெறிச்சென்று என் மடியில் நான் உணர்ந்ததும் ஒரு பெருங்கேவல், பட்டையை உரிப்பதுபோல், என்னை ஊடுருவிற்று. அந்த உடலை அப்படியே என் மார்புடன் சேர்த்து அணைத்துக்கொண்டேன். அதன் உடல் மெத்தென என் மார்பில் அழுந்திற்று.

அவள் என் தோளைத் தொட்டாள்.

“அம்—ம்—மா” என் துக்கம் உடைந்நது.

இருள் மடிகள் வயல்களிலும் வைக்கோல் போர்களிலும் என் மேலும் விழுந்தன.

அப்புறம் எனக்கு என் நினைவு இல்லை.

***

எனக்குப் படுக்கையில் இருப்புக் கொள்ளவில்லை.

நான் எழுந்து நடமாடலாம் என்று இரண்டு நாட்களுக்கு முன்னரே டாக்டர் அனுமதித்துவிட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/161&oldid=1025818" இலிருந்து மீள்விக்கப்பட்டது