பக்கம்:அஞ்சலி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56 லா. ச. ராமாமிருதம்

பாச்சுவின் உயிர் பிரிந்துபோய்விட்டது. அவனை உள்ளிருந்து என்னிரு கைகளிலும் ஏந்தி வந்து கூடத்தில் கிடத்துகிறேன். நீயும் மற்றவர்களும் என் பின்னாலேயே வந்து பாச்சுவின்மேல் விழுந்து ஏதேதோ சொல்லி அழுகிறீர்கள். வெளியிலிருந்து சேதி கேட்டு யார் யாரோ ஒடி உள்ளே வந்து அழுகிறார்கள். நான் பார்த்துக்கொண்டு நிற்கிறேன். அவனைப் பெற்றவன் நான். மனம் பாசத்தில் குழம்புகிறது. அப்படிக் குழம்பிக்கொண்டிருக்கையிலேயே, என்னென்னவோ சந்தேகங்கள். இங்கே இப்படி இடுப்பில் கையை வைத்துக்கொண்டு நிற்பது நானா? இதோ கூடத்தில் பயனற்று விழுந்து கிடப்பது என் வித்தா? சுற்றிச் சுற்றி வருவோரும் அழுவோரும் அவரவர் அவரவர் தாமா? மாஞ்சி மாஞ்சிதானா? பாச்சு பாச்சுவேவா! இப்போதான் பாச்சு இல்லையே! பாச்சு இல்லையானால் இதுவரை பாச்சுவாயிருந்தது யார்?

பாச்சு மறுபடியும் என்னுள்ளேயே புகுந்துகொண்டானா? மாஞ்சி, (ஸத்தியமாய் பாச்சுவின் சிரிப்பை என்னுள் நான் கேட்டேன்.)

குளிருக்கடக்கமாய்க் கம்பளியை இழுத்துக் கழுத்து வரை போர்த்துக்கொண்டாற்போல் பாச்சு ஆனந்தமாய் ஜதையில் நித்திரை செய்கிறான். துக்கம் பீறிடுகிறது.

எட்டிப் பார்ப்பது பாச்சுவின் முகமா, என் முகமா? நெருப்பைக் கொட்டுகிறேன். யார்மேல்? என்மேலா? நெருப்புப் பற்றிக் கொள்கிறது. எரிவது யார் பாச்சுவா நானா?

“போறும், போறும் போறுமே—!” மாஞ்சி செவிகளைப் பொத்திக்கொண்டு கதறினாள்.

“பாச்சுதான் ஒரு தினுசில்—ஆனால் இன்னொரு தினுசில், உண்மையான முறையில், பாச்சு இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/66&oldid=1024068" இலிருந்து மீள்விக்கப்பட்டது