பக்கம்:அஞ்சலி.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176 லா.சா.ராமாமிருதம்

கொண்டிருந்த பெரிய பட்சி “க்றீச்” சென்று கத்திக் கொண்டு, அதைத் தன் அலகில் கவ்விற்று. அதன் அகன்ற சிறகுகளின் விரிப்பின் அந்தகாரத்தில் நான் மூழ்கிப்போனேன்.

“காயத்ரீ!—”

அலறிப் புடைத்துக்கொண்டு எழுந்தேன்.

ஜன்னலுக்கு வெளியே புலர்ச்சியில் வான்முகடு பாளம்பாளமாய் வெடித்திருந்தது. கண்ணிரின் ஸ்படிகம் போன்று ஓரிரண்டு நட்சத்திரங்கள் உருத்தேய்ந்து கொண்டிருந்தன. காலைக் காற்று சில்லென்று புரியாத அறிகுறியில் மார்பைக் கவ்வியது. உள் குளிரில் என் உடல் நடுங்கிற்று. மார்பு இன்னும் புண்ணாய் வலத்தது,

“வால்மீகி!”

திடுக்கிட்டுத் திரும்பினேன்.

அப்பா பின்னால் கைகட்டியபடி நின்றார்.

“அவள் உனக்கு ஏற்றவள் அல்ல.”

நான் எழுந்து உட்கார்ந்தேன்.

அப்பா எப்பவுமே ஒரு விதம். விஷயங்களை எப்படி, எவ்வளவு தூரம் அறிந்துகொண்டிருக்கிறார் என்று நான் கண்டுபிடிக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள் எல்லாம் வீண்தாம். அப்பா பேசவே விருப்பமில்லாதவர். பேசினால் அவர் தொனியில் அதிகாரம் தெரியாவிட்டாலும், பேசும் விஷயத்தில் அதிகாரம் இருக்கும். அத்தோடு இல்லை. முன்பின் பீடிகையிலாது. நடுப்புற, எந்தக் கட்டத்திலிருந்து அவர் அந்த விஷயத்தைப் பற்றி அவர் பேசப்போகும் பேச்சுக்குச் சம்பந்தமும் முக்கியமும் உண்டோ, அங்கிருந்தே ஆரம்பித்துவிடுவார். அதில் இன்னொரு விந்தையென்னவென்றால் எதிராளிக்கும் எப்படியோ அவர் எதைப்பற்றிப் பேசுகிறார் என்று புரிந்துவிடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/186&oldid=1033483" இலிருந்து மீள்விக்கப்பட்டது