பக்கம்:அஞ்சலி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஜமதக்னி 73

அவன் குரலில் அற்புதமான கவிதை மிளிர்ந்தது. மாஞ்சி சுற்றுமுற்றும் பார்த்தாள். அவள் உட்கார்ந்திருந்த இடத்திலருந்து முற்றத்தில் கவிந்த இரவு தனியாய் ஆகாயத்திலிருந்து ஒரு கம்பளியை இழுத்துப் போர்த்துக் கொண்டு அப்போதுதான் எழுந்து வந்தாற்போலிருந்தது.

அவன் தன் வசமிலாது பேசினான்:

“பார், பார், மேலே பார் சின்னதும் பெரிதுமாய் விளக்குகள் ஏற்றிக்கொள்கின்றன. இத்தனை விளக்குகளையும் போட்டுக்கொண்டு என்னத்தை அவன் தேடிக் கொண்டிருக்கிறான்? பகல் வருகிறது. பகலே, உலகிற்கே ஒரே விளக்கான ஜோதியில் வருகிறது. முகம் கொடுத்துப் பார்க்கக்கூட முடியாத அந்த ராகசிய விளக்கைப் போட்டுக்கொண்டு இரவும் பகலுமாய் இன்னமும் எதைத் தேடுகின்றான்? இத்தனையும் போதாது என்று அவரவர் நெஞ்சில் ஒரு விளக்கை ஏற்றிவைத்து, இத்தனை விளக்குகளும் இன்னும் வெளிச்சம் போதாமல் இன்னமும் ஒன்றையொன்று தேடிக்கொண்டிருக்கின்றன. ஆண்டவனே, நீ என்னத்தைக் கீழே சிந்திவிட்டாய்? காலமும் யுகமுமாய் நீ தேடும் பொருள் உனக்கே அகப்படாதோ...?”

மாஞ்சி திகிலடைந்தவளாய் அவன் தோளைப் பிடித்துக் குலுக்கினாள்.

“இந்தாங்கோ, என்னைப் பாருங்கோ-என்னைப் பாருங்கோளேன்!”

அவன் திடுக்கிட்டு விழித்தவன்போல், தலையை உதறிக்கொண்டு அவளை நோக்கினான்.

மாஞ்சி பேச்சை மாற்றுவதற்காக, “நீங்கள் இது மாதிரி விளக்கண்டை உட்கார்ந்திருக்கையில் ஒருநாள் நான் உங்கள் வீட்டுக்குச் சாப்பிட வந்தேன்” என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/83&oldid=1033423" இலிருந்து மீள்விக்கப்பட்டது