பக்கம்:அஞ்சலி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108 லா. ச. ராமாமிருதம்

கறத்துக்கு சுடுதண்ணி விளாவு” “கொட்டாயிலே கன்னுக்குட்டி, தும்பையறுத்துக் கிட்டுது” “வாசல்லே சோத்துக்கு பண்டாரம் வந்து நிக்கிது...”

“நீ கண்டுக்காமே இல்லியே! இது என்ன, பேசினாத் தான் பேச்சா? அந்த உறுமல்தான் அவர் உன்னைக் கூப்பிடற பேரு. பேச்சுப் பேச்சுன்னு பேச்செல்லாம் வெறும் சத்தந்தானே ஆத்தா! எண்ணந்தான் பெரிசு... இரு இதோ வந்துட்டேன்...” அவன் இறக்கைகளை அகல விரித்து எழும்பிச் சென்றான்.

—உறுமல் சப்தம் கேட்டு பூரணி கண் விழித்துக் கொண்டாள். முதலியார் அவள்மேல் குனிந்துகொண்டிருந்தார்.

மூச்சு வாங்கிற்று. பெரிய சரீரம். கையில் கையளவு அகலத்திற்கு ஒரு சிறிய புத்தகத்துள் அடையாளமாய் ஒரு விரல்.

மறுபடியும் ஓர் உறுமல்.

“அந்த முக்காலியை இழுத்துப்போட்டு குந்து...?”

முதலியார் அப்படியே உட்கார்ந்தார். உடம்பை முக்காலித் தட்டில் இறக்குகையில் மூச்சு வாங்கிற்று.

“நான் இன்னி சாயங்காலத்துக்குள்ளே போயிடுவேன்...”

முதலியார் ஒன்றும் பேசவில்லை. இரைக்கும் மூச்சு ஒருமுறை தட்டி மறுபடியும் பாய்ந்தது.

“ஆனால் போவறதுன்னு இல்லியாமே! இந்தப் போறது வரது இதெல்லாம் வெறும் பேச்சுத்தானாமே! பேச்செல்லாம் வெறும் சத்தம்தானாமே!”

முதலியார் சுவாரஸ்யத்துடன் அவளை நோக்கினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/118&oldid=1033449" இலிருந்து மீள்விக்கப்பட்டது