பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குணமாலையார் இலம்பகம்77



“நீ சொல்லித்தான் தெரிகிறது; அவன் என்னைக் காதலிக்கக் கூடும் என்று, என்னிடம் பார்த்து மகிழ ஏதோ இருப்பதாகச் சொல்கிறாய்; அதையும் காட்டியும் விட்டால் போகிறது” என்றாள்.

“மறைத்து என்ன பயன்; நீ விறைத்து இருந்தாலும் அவன் தன் காதலை உரைத்து உன்னை வளைக்காமல் இருக்கப் போவது இல்லை; ஒரு பார்வை; அது போதும் சுட்டும் விழியில் கட்டிப் போடலாம்; காதல் என்பது ஒட்டு வியாதி; நீ கிட்டே போனால் அது ஒட்டிக் கொள்ளும்; ஒரு சின்ன பூ ஒன்று போதும்; அதை நெகிழ்த்துவிடு. ஒடிவந்து அதை எடுத்துக் கொடுப்பான்; பூவே பூச் சூடவா என்று அழைப்பான்; அதுகூட உனக்குத் தேவை இல்லை; வெறும் பொடி போட்டே நீ மயக்கி விட்டாய்; சுண்ணம் அவனை மயக்கும் சொக்குப் பொடியாகி விட்டது, அதுவே நீ விடும் காதல் துாதாகி விட்டது. அது ஏதுவாகப் பேச்சுவார்த்தை தொடரும்; அவன் தொடுக்கப்போகும் இரண்டாவது பூ நீ”

“இல்லாத காதலை நீ உன் சொல்லாலே உண்டாக்குகிறாய்; உனக்காகவே வாய்ப்பு வரும்போது காதலிக்கிறேன்” என்றாள்.

“மறைத்து என்ன பயன்; அவன் மேல் உனக்கு ஒரு கண் இருந்துகொண்டே இருக்கிறது. ஏழுநாள் இசை விழா நடந்தது. ஏழாம் நாள் மட்டும் நீ அங்கு அடி எடுத்து வைத்தாய். அன்று அவன் பாடுகிறான் என்பதால்தானே. தத்தை பாடியபோது உன் கைத்தாளம் ஏன் மடங்கி விட்டது? அவன் பாடும்போது மட்டும் உன் உடம்பே அசைபோட்டது ஏன்?”

“இசைஞானி” என்று இசைத்து மற்றவர்கள் பரவசப்பட்டபோது நீ ஏன் உன் கையிலிருந்த துாசினைத் தட்டிக் கொண்டு இருந்தாய். அப்படி நீ கைதட்டினால் அவன் வந்து உன்மெய்தட்டுவான் என்ற ஆசைதானே காரணம்.”