பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

தமிழ் இலக்கியக் கதைகள்

போலக்கேட்கிறதே?” என்றார். விக்குவது யாரென்பதை அறிந்து கொண்ட புலவர் அந்தச் சந்த்ர்ப்பத்தை நழுவவிடாமல்,

நாட்டிற் சிறந்த திருமலையா துங்க நாகரிகா!
காட்டில் வனத்தில் திரிந்துழலாமற் கலைத்தமிழ் தேர்
பாட்டிற் சிறந்த படிக்காசன் என்னுமோர் பைங்கிளியைக்

கூட்டிலடைத்து வைத்தாய் ‘இரைதா’ என்று கூப்பிடுதே"

துங்க = உயர்ந்த, நாகரிகா = நாகரிகமுடையவனே, இரை = உணவு.

என்று திருமலைராயபூபதியை நோக்கிப்பாடிவிட்டு நடந்த எல்லாவற்றையும் கூறினார். பூபதி உடனே காவலர்களைச் சினத்தோடு கண்டித்துவிட்டுப் படிக்காசரை விடுதலை செய்து மன்னிப்புப் பெற்றுக் கொண்டார். சமயத்தில் விக்கலை உண்டாக்கிய அரிசிக் கொய்யா விதைகளை மனதிற்குள் வாழ்த்தினார் படிக்காசர்.

31. உதவும் சாமி

திருமயிலை வள்ளல் வேங்கடசாமியை அறியாத தமிழ்ப் புலவர்கள் இருக்க முடியாது. தமிழ்ப் புலவர்கள் என்று வருவோர்க்கு அடையாத கதவு திருமயிலை வள்ளலின் கதவு. கொடுத்து மகிழ்வதையே ஒரு கடமையாகக் கொண்டிருந்தார் அந்த வள்ளல்.தமிழ்க் கவிஞருலகம் முழுவதும் அவருடைய இந்த மழை போலக் கொடுக்கும் இயற்கையான கொடையை அறிந்தும் அனுபவித்தும் இருந்தது. பாடியும் புகழ்ந்தும் அவரைப்பாராட்டி மகிழ்ந்தது:அறியாதவர்களுக்கு அவர் பெருமையை அறிவித்தது.

அப்படி அவர் புகழையும் கொடைத் திறத்தையும் அறிந்து, கேள்விப்பட்டு, அவர்பால் வந்த தமிழ்க் கவிஞர்களுள் இராமச்சந்திர கவிராயரும் ஒருவர். இராமச்சந்திர கவிராயர் திருமயிலையை அடைந்து வேங்கடசாமி வள்ளலின் வீட்டிற்குச்