பக்கம்:அறிவுக்கு உணவு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

அறிவுக்கு உணவு



விருந்து

பிறர் அன்பு காரணமாக உணவைத் தயாரித்து உனக்கு உண்ணக் கொடுப்பர். அது, உன்னை மகிழச் செய்து அவர் தான் மகிழ்ச்சி அடைவதற்காகவேயாம். ஆனால், உண்டு துன்பப்படுகிறவனோ நீதான். அதனால், அவர்களுக்கு நன்றி செலுத்தி, விருந்து உண்பதில் எச்சரிக்கையாயிரு.


எதைக் காப்பது

வாழ்ந்து கெட்ட மனிதர் சிலர்; பேசிக் கெட்ட மனிதரோ பலர். ஆகவே, முதலில் காப்பாற்றப் பெற வேண்டுவது நாக்கு.


எது நல்லது?

எதையும் வயதுசென்ற பெரியவர்களிடம் ஆலோசனை. கேட்டுச் செய்வதே நல்லது. அவர்களோடு வாது புரியும் அளவிற்கு நீ வந்துவிட்டால், அவர்களிடம் எதையும் கேளாதிருப்பது நல்லது.


வளரும் செல்வம்

பொருட் செல்வம் பங்கு பிரித்துவிட்டால் குறையும். கல்விச் செல்வம் பங்கிட்டுக் கொடுத்தால் குறையாது. ஆனால், அருட்செல்வமோ பங்கிட்டுக் கொண்டால் வளரும்.


எதனால் வந்த வினை?

ஒவ்வொருவரும் பிறரைப்பற்றித் தப்புக் கணக்குகளைப் போட்டே வாழ்கின்றனர். இது அவர்கள் முதலில் தங்களைப் பற்றியே தப்புக் கணக்குப் போட்டுப் பழகியதால்வந்த வினை.


இழிவைத் தருவன!

அறிவாளிகளே வரிசையில் நின்று நூல்களை வாங்கும் காட்சியை அமெரிக்காவில் காணலாம். தமிழகத்தில் அறிவுடையவர்களுங்கூட நல்ல நூல்களை வாங்கிப் படிப்ப தில்லை இது மக்களின் தரத்தைக் காட்டினாலும் சரி.நூல்களின் தரத்தைக் காட்டினாலும் சரி- இரண்டுமே நமக்கு இழிவைத் தருவன.