பக்கம்:அவள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xiv

 

ஒரு வார்த்தையாக? ஒரு சொல்? ஊ-ஹூம் அத்தனைத் தகுதிக்கு எங்கே போவேன்? என் பேத்தி வந்திருக்கிறாளே, ஜனனியின் மனோவிலாசமும் விசாலமும், ஐக்கியமும்தான் ஆகாயத்தையும் உள்ளடக்கும். ஏனெனில் அவள் நிர்மலத்திலிருந்து வந்திருக்கிறாள்.

லால்குடி போம் வழிக் காட்சிகள் பயக்கும் உள்ள நெகிழ்ச்சி, என்னுடையது மட்டுமன்று ஒவ்வொரு காவிரியானுடையதுமே.

'இதோ ஆனைக்கா கடந்து, இதோ வாளாடி, ஆங்கரை, எனச் சோலைகள் வழி இடங்கள் தாண்டி பஸ், 'சடக்' கென்று திருச்சி நெடுஞ்சாலையிலிருந்து சிறுதையூருள் திரும்பி உடனே பஸ் நிலையத்தில் நின்றதும், லால்குடி வந்தாச்சு.

தளர்ந்த வயோதிகத்தில், கோவில், ஊர் நடுவே நிற்கிறது. லால்குடியின் ஹ்ருதயம். ஏன், என் முன்னோர்களின் வழி வழி ஹ்ருதயம். கோபுரத்தைப் பார்க்கையில் நெஞ்சை என்னவோ செய்கிறது. காலடியில் பூமி விட்டாற்போல். காரணம் எனக்கு வயதாகிவிட்டது மட்டுமன்று.

அம்மன் சன்னதியில் நுழைகையில் மெத்தென்று ஒரு அமைதி, ஆசிபோல் என்மேல் இறங்குவதை உணர்கிறேன்.

"என்னடாப்பா, வந்தாயா!" பெந்துப்பாட்டியின் மோனக்குரல் நெஞ்சில் தங்கமோதிரம் தெறித்து விழுந்தாற்போல் இசைக்கிறது.

இதெல்லாம் என் எண்ணம்தான் என்று வாதிப்பவருக்கு ஒன்று சொல்கிறேன். தெய்வமே பாவனை தானே: கல்லில் என்ன இருக்கிறது? தொன்றுதொட்டு, காலம் காலமாய், வழிவழி வந்து அந்தக் கல்லுக்குள் குடி கொண்டுவிட்ட பாவனையில்தான் வாழ்வே (தெய்வம் உண்டா இல்லையா எனும் சர்ச்சை உள்பட) இயங்குகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/14&oldid=1495868" இலிருந்து மீள்விக்கப்பட்டது