பக்கம்:அறநூல் தந்த அறிவாளர்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருந்தமிழ் அறநூல்கள்

3


ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், கைந்நிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி என்னும் பதினெட்டு நூல்களும் கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும். இவை எல்லாம் கடைச் சங்க காலத்தில் தோன்றியன என்று கூற முடியாது. சில நூல்கள் ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றியன ஆகும்.

நூலும் இரண்டும்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திணை ஒழக்கங்களைப்பற்றிக் கூறும் சில நூல்களைத் தவிர மற்றவையெல்லாம் அறம் உரைக்கும் திறம் உடையனவே, அவற்றுள் திருக்குறளும் நாலடியாரும் இணையற்ற அறநூல்கள் ஆகும். இவ்வுண்மையைத் தமிழில் வழங்கும் பழமொழி ஒன்றால் நன்றாக உணரலாம். ஆலும் ‘வேலும் பல்லுக்கு உறுதி நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி’ என்பது அப்பழமொழி ஆகும். ஆலம் விழுதையும் கருவேலங்குச்சியையும் கொண்டு பற்களைத் துலக்கினால் அவை உறுதியாக இருக்கும்; அவற்றைப் போல் தமிழ்ச் சொல்லுக்கு உறுதியைத் தரும் நூல்கள் - திருக்குறளும் நாலடியாரும் ஆகும்.