பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

இ-ள்: எனக்கு இனிமை தரும் என் தந்தையும் எல்லார்க்கும் ஈசனும் ஆகிய இறைவனே எக்காலத்தும் இனிமை தரும் சேம நிதியாக என் உள்ளத்துள் போற்றி வைத்தேன். அப்பெருமானேயே என் தலைவனாகக்கொண்டேன். அங்ங்னம் கொண்ட அளவிலேயே பிறவித்துயர் நீங்கிப் பேரின்பம் கைவரப் பெற்றேன். அடியேற்குக் கிடைத்தற்கரியதொன்றுண்டோ ? (எல்லாம் எளிதிற் கிடைக்கும்) எ-று.

வைப்பு-சேமநிதி. அவனே எனக்குப் பிரானாகக் கொண்டேன் என இயைக்க. கொள்ளுதல் - உறுதியாகக் கடைப்பிடித்து ஒழுகுதல்.

ஒன்றே நினேந்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந் தேன்
ஒன்றேயென் உள்ளத்தி னுள்ளடைத்தேன் - ஒன்றேகாண்
கங்கையான் திங்கட் கதிர்முடியான் பொங்கொளி
சேர் அங்கையாற் காளா மது. (1 |

இ-ள்: ஒன்றையே என் மனத்தில் இடைவிடாது நினைந்திருந்தேன். ஒன்றாகிய அதுவே வேண்டத்தக்கதென்னுந் துணிபுடையேனாகி ஏனைய வற்றை விட்டொழித்தேன். ஒன்றாகிய அதனையே உறுதிப்பொருளாக என்னுள்ளத்திற் கொண்டேன். அத்தகைய ஒன்று என்பது, கங்கையாற்றைத் தாங்கியவனும் திங்களைச் சூடி ஒளிதிகழும் திருமுடியை யுடையவனும் சுடரின் ஒளிமிகுந்து விளங்கும் அழகிய கையினையுடையானும் ஆகிய சிவபெருமானுக்கு ஆட் படுதலாகிய அதுவேயாம் என அறிவாயாக. எ-று.