பக்கம்:அலைகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10 லா. சா. ராமாமிருதம்

கல்யாணமானதிலிருந்து நான் அவளைக் காணாததால் என் மனைவிமேல் நான் வெகுவாய் ஆசை கொண்டிருந்தேன்.

—நான் புத்திசாலி.

—நான் படித்தவன்.

படிக்கப் படிக்க சந்தேகந்தான். புத்தி அதிகமாக ஆகக் குழப்பந்தான்,

புத்தியைவிட உணர்ச்சிதான் உயர்ந்தது. மூளையை விட இதயம்தான் பெரியது. ஞானத்தைவிட பக்தி தான் உயர்ந்தது.

என் தகப்பனுக்கு அவர் தொழும் தெய்வத்தினிடம் பக்தி இல்லை.

இத்தனைக்கும் நாலு தலைமுறையாய் நாங்கள் கோவில் குருக்கள்,

அவருக்குப் பக்தியிருந்ததோ என்னவோ, அவர் பூஜை செய்யும் தினுசில் இல்லை. சுவாமி நெற்றியில் காய்ந்து போயிருக்கும் முந்திய நாள் சந்தனத்தைக் கிள்ளக்கூட மாட்டார். அப்படியே ஒரு செம்பு ஜலத்தை, சாட்டை மாதிரி சுவாமி முகத்தில் அடிப்பார்.

நான் கூட இருப்பேன்.

“அப்பா, சுவாமி உடம்பெல்லாம் நனைய வில்லையே?" என்பேன்.

"எனக்கு இடுப்புத்தான் பிடிப்பு. காது செவிடில்லை, இன்னமும் கொஞ்சம் மெதுவாய்க் கத்தலாம்" என்று மண்டையிலடிப்பார். நான் அழுதுகொண்டே நிற்பேன்.

அப்புறம் சாவகாசமாய் “நீ, பெரியவனாய்ப்போய் என் வேலையைச் செய்யறப்போ, கோவில் கிணற்றையே தூறெடுத்துச் சுவாமி தலையில் கொட்டு, வேண்டாம் என்கவில்லை. எனக்கு வயசாயிடுத்து. இடுப்புப் பிடிப்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/12&oldid=1298512" இலிருந்து மீள்விக்கப்பட்டது