பக்கம்:அறிவுக்கு உணவு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

அறிவுக்கு உணவு


“இவற்றை எண்ணிப் பார்க்கும்பொழுது என் தலை சுழல்கிறது. நான் எப்படி வாழ்வது?” என்று வினவினார் ஒருவர்.

“தம்பி! அதுதான் உலகம் என்பது. அது அப்படித்தான் சுழலும்! அதற்குள்ளேதான் நீ வாழ்ந்ததாக வேண்டும்” என்பதே அதற்கு விடை.


எது?

துன்பத்திற்குப் பிறப்பிடம் எது?
இன்பத்திற்கு அழிவிடம் எது?
தோல்விக்குப் பிறப்பிடம் எது?
வெற்றிக்கு அழிவிடம் எது?
தீமைக்குப் பிறப்பிடம் எது?
நன்மைக்கு அழிவிடம் எது?
வறுமைக்குப் பிறப்பிடம் எது?
வாழ்வுக்கு அழிவிடம் எது?

-சோம்பல்.


மறதி

‘வைகிறார்களே!’ என்று வருந்துகிறவன், தன கடமையை மறந்துவிடுகிறான்.

‘வாழ்த்துகிறார்களே!’ என்று மகிழ்பவனும், தன் கடமையை மறந்துவிடுகிறான்.

வைதுகொண்டும் வாழ்த்திக்கொண்டும் இருப்பவனைப் பார்த்துக் கொண்டிருப்பவனும், தன் கடமையை மறந்து விடுகிறான்.


எவன் பைத்தியக்காரன்?

கடையில் முதலாளி ஒருவன் அதிகமான பணத்தை எண்ணிக் கொண்டிருந்தான்.

பிச்சைக்காரன் ஒருவன் வந்து காசு கேட்டான்.அவனை கணக்குப் பிள்ளை விரட்டினான். பிச்சைக்காரன் எதிர்த்தான் முதலாளி, “அவனை விரட்டவேண்டாம்; அவன் பைத்தியக் காரன்,” எனக்கூறி, ஒரு காசு கொடுத்தனுப்பினான்.