பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7 அற்புத மனிதர்


பின்னர் பாவை சந்திரனை ஆசிரியராகக் கொண்ட ‘புதிய பார்வை’ இதழில் பணியாற்றினார். சமீப காலமாக அம்பலம் இன்டர்நெட் இதழை அவரது சங்கீதக் கட்டுரைகள் தொடர்ந்து அலங்கரித்து வந்தன.

75 வயது நிறைந்த நீலமணி எந்தக்குறிப்பிட்ட குழுவையும் சாராத பொது எழுத்தாளர். குழு சார்ந்து இயங்குபவர்களுக்கு, அந்தந்தக் குழுவினரால் உயர்த்திப் பிடிக்கப்பட்டுப் புகழ்பெறும் செளகரியம் உண்டு. குழு சாராதவர்கள், மாபெரும் சாதனை செய்தாலன்றி, ஓரளவு கூடப் பெயர் வாங்க இயலாது என்ற நிலைதான் தமிழில் நிலவுகிறது.

நீலமணி நிறைய எழுதினார் என்பதோடு நிறைவாகவும் எழுதினார். கலைமகள் நாராயணசாமி ஐயர் பரிசு பெற்ற அவருடைய ‘புல்லின் இதழ்கள்’ என்ற நாவல், ஒரு சங்கீத நாவல். தமிழில் சங்கீத நாவல் என்றே ஒரு வகை உண்டு. தி.ஜானகிராமனின் மோகமுள், ந. சிதம்பர சுப்ரமணியனின் இதயநாதம், ரஸவாதியின் ஆதார சுருதி, சுஜாதா விஜயராகவனின் அரங்கம் இதெல்லாம் கர்நாடக சங்கீதப் பெருமையைப் பேசுபவை. ஜெயகாந்தனின் ‘பாரீசுக்குப் போ’ மேற்கத்திய இசைச் சிறப்பைச் சொல்வது. தம் ஒரு சங்கீத நாவலால் தற்காலத் தமிழிலக்கியத்தில் நிரந்தர இடம் பெற்றிருக்கிறார் நீலமணி.