பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21 அற்புத மனிதர்


உண்மையில் உறுதி; உதவுவதில் முன்னிற்றல்; வாணிகத்தில் பற்று - இம்மூன்றுமே அவரது குடும்பத்தினரின் தனிப் பெரும் பண்புகளாக விளங்கின.

அண்ணாமலை பிறந்ததும் அக்குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சிக் கடலில் திளைத்தனர். குடும்ப ஜோஸ்யர் கூறினார்:

‘ஆண் மூலத்தில் பிறந்த பிள்ளை அரசாளப் போகிறான்’ - என்று அவரது வாக்குப் பலித்தது.

பின்னாளில் அண்ணாமலைச் செட்டியார் அத்தகைய வாழ்க்கைத் தகுதிக்கொப்ப; அறத்தாலும், திறத்தினாலும் தன்னை உயர்த்திக் கொண்டு, செட்டி நாட்டு அரசரானார்.

கடைக்குட்டி என்று அனைவராலும் செல்லமாக வளர்க்கப்பட்ட, தன் மகன் அண்ணாமலையை பள்ளியில் சேர்க்க முத்தையா செட்டியார் நாள் பார்த்தார்.

அண்ணாமலையின் ஐந்தாவது வயதில் குறித்த நாளன்று வீட்டில் விசேஷ பூஜைகள் செய்து, குடும்பத்தினர் புடைசூழ, பாண்டும், மேள வாத்தியங்களும் முழங்க பட்டு வேஷ்டி, பட்டுச் சட்டை அணிந்து கொண்டு முதலில் விநாயகர், கோவிலுக்கும், பின்னர் சரஸ்வதி கோவிலுக்கும் சென்று வணங்கிவிட்டு, அண்ணாமலை பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.

அக்காலத்தில் வசதி படைத்தவர்களின் குழந்தைகளே பள்ளிக்குச் செல்லும் பழக்கம் இருந்தமையால் - ஆரம்பப் பள்ளி என்பது, ஒரு வீட்டில், சில தடுப்புகளுடனேயே இயங்கி வந்தது.