பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



1. அந்த நாள்

ன்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நாள், அந்த நாள்-என்னுடைய வாழ்க்கையில் மட்டுமென்ன, நம் எல்லோருடைய வாழ்க்கையிலுமே அந்த நாள், மறக்க முடியாத நாள் தான்!

அன்று காலைதான் அவருக்கு நான் இரண்டாந்தாரமாக வாழ்க்கைப்பட்டேன். அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, அக்கினியை வலம் வந்தேன். பஞ்ச பூதங்களின் சாட்சியாக, பந்துமித்திரர்களின் சாட்சியாக அவர் என்னுடைய கழுத்தில் தாலியைக் கட்டினார். அந்தத் தாலியைச் சில சீர்திருத்தவாதிகள் சொல்வதுபோல நான் துாக்குக் கயிறாகவோ, அடிமையின் சின்னமாகவோ மதிக்கவில்லை; காமுகரிடமிருந்து என்னைக் காக்கும் சாட்டையாகவும், ஆணும் பெண்ணும் கலந்த அன்பின் சின்னமாகவுமே மதித்தேன். அன்றிருந்து சட்ட பூர்வமாகவும் சாஸ்திர பூர்வமாகவும் அவர் எனக்கு முதல் கணவரானார்; நான் அவருக்கு இரண்டாவது மனைவியானேன்!

நல்ல வேளையாக முதல் மனைவி இருக்கும்போதே அவர் என்னை இரண்டாந்தாரமாகக் கொள்ளவில்லை; இல்லாத போதுதான்-அதாவது, இறந்து மறைந்த பிறகுதான் கொண்டார்.