பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2. அசட்டு அத்தான்

சொல்ல மறந்துவிட்டேனே, எனக்கு அத்தான் ஒருவர் இருந்தார். அவரை மனிதன் என்றால் அசல் மனிதன் என்று சொல்ல வேண்டும். இப்படிச் சொல்லும்போது இலக்கியம் அஹிம்சா பூர்வமாகவும் சட்டம் ஹிம்சா பூர்வமாகவும் ஏதோ ஒரு மனிதனை உருவாக்க யுகயுகாந்திரமாக முயன்று கொண்டிருக்கிறதே, அந்த மனிதனை நான் சொல்லவில்லை; பிறக்கும்போதே எண்ணற்ற பலவீனத்தோடு பிறக்கிறானே, அந்த மனிதனைச் சொல்கிறேன்!

ஆம், நாகரிகம் மனிதர்களில் பலரை 'இரட்டை மனிதர்க'ளாக்கிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்திலே, என் அத்தான் மட்டும் 'ஒற்றை மனித' ராகவே இருந்து வந்தார். அதாவது, அவருடைய உதட்டில் அமிர்தமும் கிடையாது; உள்ளத்தில் விஷமும் கிடையாது. இதனால் வாழ்க்கையில் அவர் வெற்றியடையவில்லை; தோல்விக்கு மேல் தோல்வியாக அடைந்து கொண்டிருந்தார். ஆனால் ஒன்றை மட்டும் இங்கே சொல்லிவிட வேண்டும்-பலவீனத்தைப் போலிப் பண்பாட்டால் மறைத்துக் கொள்ளத் தெரியாத அவரால், சமூகம் தாக்கப்பட்டாலும் ஏமாற்றப்படவில்லை!