பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அணிந்துரை

செட்டி நாட்டு அரசர் சர் ராஜா அண்ணாமலை செட்டியார் வாழ்க்கை வரலாற்றை இளைஞர்களும் குழந்தைகளும் எளிதாய்ப் புரிந்து கொள்ளும் வண்ணம் அழகான தமிழில் எழுதியுள்ளார் அமரர் திரு.கே. பி நீலமணி.

ஆண் மூலம் அரசாளும் என்பார்கள். மூல நட்சத்திரத்தில் (30-9-1881) பிறந்த அண்ணாமலை செட்டியார் தமிழ் இசைக்காக தமிழ் மொழிக்காக உழைத்த உத்தமர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தினை நிறுவி பலருக்குக் கல்வியை வழங்கிய அண்ணாமலை செட்டியார் சிறந்த கொடை உள்ளம் படைத்தவர்.

ஈட்டலும், காத்தலும், வகுத்தலும் என்னும் மூன்று எழுத்தை தாரக மந்திரமாகக் கொண்டு வாழ்ந்த அண்ணாமலை செட்டியாருக்கு தமிழ் இசை மீது இருந்த ஈடுபாட்டை இந்நூலில், இசை விமர்சகரும், தினமணியின் ஆசிரியர் குழுவில் இருந்தவரும், சிறந்த சிறுகதை எழுத்தாளரும், குழந்தை இலக்கியவாதியுமான கே.பி. நீலமணி தெளிவுபட எழுதியிருப்பது பாராட்டத்தக்கது!

அண்ணாமலை செட்டியார் எங்குச் சென்றாலும் திருக்குறள் நூலைத் தன்னுடனே எடுத்துச் செல்வாராம். திருக்குறளை மேற்கோள் காட்டியும் பேசுவாராம். ராஜா அண்ணாமலை செட்டியாரின் புகழ்பாடும் அற்புதமான நூல் இது!

கீழாம்பூர்

ஆசிரியர் - கலைமகள்

15–12–2004