பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45 அற்புத மனிதர்



இப்பல்கலைக் கழகம் நிறுவுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம், ‘திருவேட்களம்’, என்பது. இங்குள்ள ஆலயத்திற்கு அண்ணாலைச் செட்டியாரின் சகோதரர் ராமசாமி செட்டியார் சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் திருப்பணிகள் செய்து முடித்திருந்தார்.

அந்தச் சிறிய கோயிலும் - அதைச்சுற்றிலுமுள்ள பிரம்மாண்டமான பரப்பளவுள்ள இடமும் அவர்களைச் சேர்ந்ததுதான்.

இந்த ஸ்தலம் சுமார் ஆயிரத்தி இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டவர்களாகிய திருஞான சம்பந்தராலும், திருநாவுக்கரசராலும் பாடப் பெற்ற திருத்தலமாகும்.

திருஞான சம்பந்தர் இத்திருத்தலத்தில் சிறிது காலம் தங்கியிருந்தார் என்கிற பெருமையும் அந்த மண்ணிற்கு இருந்தது.

பல்கலைக்கழகம் இடம் பெறப்போகும் இடம் நிர்ணயிக்கப்பட்டு அஸ்திவாரம் தோண்டப்பட்டது. அதன் பிறகு காரியங்கள் அசுர வேகத்தில் நிறைவேறின.

கழகத்தின் பிரதான கட்டிடத்தை ஒட்டினாற்போல், பல அழகான சிறிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டன.

பல்கலைக் கழகத்தின் பகுதிகளாக அமைவதற்குரிய அறிவியல் கல்லூரி, தமிழ்க் கல்லூரி, வடமொழிக் கல்லூரி, தமிழ் - வடமொழி ஆசிரியப் பயிற்சிக் கல்லூரி, இசைக் கல்லூரி ஆகியவை அழகிய வடிவில் உருப்பெற்றன.

இதற்குள் முத்தையாச் செட்டியார் கல்லூரி படிப்பு முடித்து பட்டதாரி ஆகிவிட்டார்.