பக்கம்:அலைகள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சோம சன்மா O 195



சிவந்தன. ஹீங்காரம் பண்ணிக் கொண்டு, அவ்வரக்கன் மீது பாய்ந்தான். ஊளையிட்டுக் கொண்டு, அந்த மிருகம் புறமுதுகிட்டு ஓடியது. 'பிராம்மண' கோபத்தின் முன் எது தான் நிற்க முடியும்.........?

அந்தப் பெண் அடர்ந்து வளர்ந்த புதர்களினின்று வெளிப்பட்டு, அவனை வணங்கிய பொழுது தான், அவனுக்கு அவள் நினைவு வந்தது. தாழ்ந்த குலத்தினள் தான். கன்னங்கறுத்த மேனி. ஆயினும், என்ன வனப்பு! அப்பெரும் விழிகளில் எவ்வளவு மருட்சி மேனி பட்டுப்போல் மின்னியது. அச்சாய் அமைந்த அவயவங்களின் மனத்தில் எழுந்த ஆசையும், கண்ணை மறைத்தன.

'பெண்ணே நீ யார்?’ என்னும் கேள்வி, தொண்டையில் எழுந்ததேயன்றி வாயில் கிளம்பவில்லை. ஆம், வாய்ச் சொல்லில் என்ன பயன்? அவள் நிற்கும் நிலையும் பார்க்கும் பார்வையும், அவள் மனத்தில் உள்ளதை வெட்ட வெளிச்சமாய் திறந்து காண்பித்தன. அவள் யாராயிருந்தால் என்ன? இவளை ஏற்றுக் கொண்டால் என்ன? காசியபப் பிரம்மா, மாயையைக் கூடவில்லையா? பராசரர், மச்சகந்தியை இச்சிக்கவில்லையா? ஸுப்ரஹ்மண்யன் வள்ளியைக் கொள்ளவில்லையா? பகவன் என்னும் பிராம்மணன் ஆதியென்னும் பறைச்சியை அங்கீகரிக்கவில்லையா? முற்றிலும் கடந்தவனுக்கு குலமேது, கோத்திரமேது, வரம்பு ஏது?

அவள் கண்களால் சிரித்துக் கொண்டே, ஊடலாய்ப் பின்னிடைந்து ஒட ஆரம்பித்தாள். அவன் பின் தொடர்ந்தான். பாறைக்குப் பாறை மேட்டுக்கு மேடு தாவி, குன்றின் உச்சியை நாடி அவள் ஓடுகையில், அவள் உடல் கட்டின் விறுவிறுப்பும், சந்தனக் கட்டைபோல் வழுவழுத்த வளமான தொடைகளின் மிடுக்கான ஒடிப்பும், அவனைத் திணற அடித்து, மூளையில் வெறியை உண்டாக்கியது. வெகு வேகமாய்க் குன்றைச் சுற்றிக் கொண்டு போய், உச்சியில் தி டீரென்று எதிரில் தோன்றினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/197&oldid=1290275" இலிருந்து மீள்விக்கப்பட்டது