பக்கம்:அலைகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70 O லா. ச. ராமாமிருதம்

 இதுவரை தெரியாத, தோன்றாத, புரிந்தும் புரியாத அதற்குச் சம்பந்தங்கூட இல்லாத பாஷையில் விஷயமும் கேள்வியுமாய்த்தானே அமைவது போலும் அதற்குத் தோன்றிற்று.

“நான்."

“நான் யாரா யிருப்பினும் சரி, நான் என்னுருவில் நல்லுருவாய்த்தான் தானானேன். ஜன்மத் தொடர்பின் அழுக்கில் புழுத்து நான் எழவில்லை. என் பிறவி என்னாலல்ல. நேரே உன் கைகளிலிருந்தே உன் ஆசையில் சமைந்தேன். உண்மைக்கும் உள்ளுண்மையில், என் பிறவியும் நானும் உன்னாலேயே உன்னுடையதே. உன் லஷியங்களின் லக்ஷணங்களோடு நான் உருவானதால், உன் விதிப்படியே நான் எடுத்த பிறவிக்கு அழகு செய்ய வேண்டியவனே. ஆனால் ஏன் என்னை இப்படி, என் முதல் பிறவியிலேயே, என் பிறவியின் அவமானச் சின்னமாய் ஆக்கினாய்?”

வானத்தின் நட்சத்திரங்கள் வெட்கிக் குனிந்து ஒன்றன் பின் ஒன்றாய் அவிந்தன. மேகப்படலங்கள் சூழ்ந்தன.

“நான் பிறவியை மறுக்கவில்லை. இறப்பையும் மறுக்க வில்லை. எனக்கு இயக்கம் தந்து என்னை ஒரு தனிக்கூடாய் ஆக்கியபின், நான் வாழ்வை மறுக்கவில்லை. மறுக்க முடியாது. ஆனால் என்னை வாழ விடாது என் வாழ்க்கையை வியர்த்தமாக்கியது ஏன்? மெய்யெனவே என் வித்தைப் பாறைமேல் சிதற விட்டாய். நீ என்னைப் பிறப்பித்தாய். நான் உன் குழந்தை. ஆனால் நீ என் தாய் அல்ல. நீ உன் குழந்தையைக் கைவிட்டு ஓடிவிட்டாய். என்னைப் பெற்றவள். என் பிறப்பில் தன் உயிரைக் கொடுத்து வெள்ளத்தில் மறைந்து போனாள். அவள் செத்தாள். நான் இருக்கிறேன். நான் இப்பொழுது செத்துப் போய்க் கொண்டிருக்கிறேன். நீ ஒடிப் போய்விட்டாய். நீ ஒடிப் போனதால், சத்தியத்தின் நித்தியத்தையே பொய்யாக்கின உனக்கு விமோசனமே கிடையாது. எனக்கு உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/72&oldid=1288221" இலிருந்து மீள்விக்கப்பட்டது