பக்கம்:அலைகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54 O லா. ச. ராமாமிருதம்

 வண்டி நகரும் ஒவ்வொரு அடியும், தாண்டும் ஒவ்வொரு கம்பமும், இந்த மூன்று நாட்களின் கனவிலிருந்து எட்ட எட்ட என்னை எடுத்துச் செல்வனபோல் உள் தோய்கையில் விசனம் வண்டலாய் இதயத்தில் இறங்கி வழிகின்றது.

ஒரு தென்னங்கன்றின் மட்டைமேல் ஒரு பச்சைக் கிளி உற்சாகமாய் ஊஞ்சலாடுகிறது. யாரைப்பற்றி அதற்குக் கவலை? தன்னைப் பற்றிக் கூடயில்லை. அதன் வாழ்வு அதன் பிரித்த சிறகில் இருக்கிறது; பாக்கி வேளை ஒடுங்கிய சிறகுள் அடங்கிக் கிடக்கிறது.

என் பாடு அப்படியா?

நான் காணாத இரும்புச் சங்கிலிகளின் கனம் கழுத்திலும் கைகளிலும் கால்களிலும் அழுத்துகின்றபோதும் நகரும் போதும் நெஞ்சில் “க்ளாங் க்ளாங்" கிடுகிறது.

பக்கத்து ஸ்டேஷனில் வண்டி நின்றதும், உள்ளே ஒரு அலை மோதுகிறது.

மஞ்சள் புடவை. அதில் ஆங்காங்கே சுடர்விடும் ஜிகினாப் பொட்டுக்கள். மார்போடு அடுக்காய் அணைத்த தோல் பை புத்தகம், டிபன் டப்பா.

குண்டலங்கள்?

அவள் கண்கள் வண்டியுள் தேடியலைந்து என்மேல் தங்கின. மூச்சு லேசாய்த் திணறிற்று.

என் தொண்டை தவிக்கிறது. எழுந்து நின்றேன். எனக்கு வாயடைத்துவிட்டது.

என் இடத்தை இரு கைகளாலும் காண்பிக்கிறேன். ஆனால் அவள் உட்காரவில்லை. என் கைகளை அவள் பார்க்கவில்லை. என் முகத்தில் நிலைத்த பார்வை பெயர வில்லை.

அப்படியே கடைசிவரை நின்றுகொண்டிருக்கிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/56&oldid=1287245" இலிருந்து மீள்விக்கப்பட்டது