பக்கம்:அலைகள்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதழ்கள் O 271


நாம் சின்ன விஷயத்தைப் பெரிசு பண்ண வேண்டாம். என் வீட்டிலே உன்னை நான் பேசி அவமானப் படுத்தக்கூடாது. அதனாலே நான் இத்தோடே நிறுத்திண்டுடறேன். இப்போ உன் மனசைப் புண்படுத்தினதுக்கு என்னை மன்னிச்சுடு.’

அப்பா விர்ர்ன்னு தன் ரூமுக்குப் போய்க் கதவைச் சாத்திண்டுட்டார். எனக்கு வாயடைச்சுப் போச்சு.

"ரொம்-ம்-ம்-ப சமத்துத்தான் போன்"னு அம்மா மொண மொணன்னு ஆசீர்வாதம் பண்ணிண்டே அடுக்களைக்குப் போனாள்.

சுவத்துலே சாஞ்சுண்டு முழங்காலைக் கட்டிண்டு நான் பாட்டுக்கு மணிக்கணக்கிலே உட்காந்துண்டிருந்தேன். என்னைச் சுத்தி மறுபடியும் உலகம் இயங்க ஆரம்பிச்சுடுத்து குழந்தைகள் சத்தம் போட்டிண்டிருந்ததுகள்.

அப்பா ஜோரா தலையை சீவிண்டு. வண்ணான் மடிப்பிலிருந்து புதுசா ஜரிகை வேஷ்டியும் சந்தனக்கலர் ஜிப்பாவும் உடுத்திண்டு (அப்பா ஜிப்பா போட்டுண்டா என்ன வாட்ட சாட்டமாகக் காட்டறது!) ஸீமாவைத் தூக்கிக் கொஞ்சிண்டு வெளியிலே போயிட்டா. அம்மா கீழே அலங்கோலமா கிடக்கிற படுக்கையெல்லாம் சுருட்டி கட்டில்லே வெச்சுட்டு ஸ்னானம் பண்ணிட்டு வந்தாள். (விழுப்புப் பட்டுண்டாளே!)

"பால்மா!"

பளிச்சுனு தேச்ச வெண்கலச் சொம்பை அம்மா கொண்டு வந்து ஊஞ்சல் பலகை மேல் வெச்சா.

தோள்மேல் அணை கயிறு தொங்க பால்காரன், பால் குவளையோடு சொம்புமேல் குனியறான்.

"நுரையை அடக்கி ஊத்தேண்டா!’

"அடக்கித் தானே ஊத்துறேன், பாத்துட்டுதானே இருக்கிங்க!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/273&oldid=1287232" இலிருந்து மீள்விக்கப்பட்டது