பக்கம்:அவள்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாக்ஷாயணி 169

இப்பொழுது இல்லையென்றால் வேறு எப்படி இருக்கிறோம்!. இருக்கிறோம் என்றால் இல்லாமலும் இருக்கிறோமே? புரியவில்லை. ஆனால் புரியவும் புரிகிறது. ஆனால் புரியவும் வேண்டாம்; என்ன இது?'

"நீயும் நானும் எங்கோ ஓர் எல்லைக்கோட்டில் இருக்கிறோம். நாம் இப்பொழுது குழந்தைகளாகி விட்டோம். குழந்தை தூக்கத்தில் சிரிக்கிறது. உடனே விக்கி விக்கி அழுகிறது. இது என்ன?”

'சுவாமி தூக்கத்தில் குழந்தைக்குத் தாமரைப் பூவைக் காட்டுவாராம்! அதைப் பார்த்ததும் அது சிரிக்குமாம். அவர் பூவை மறைத்ததும் அழுமாம்.'

'நாமும் தாமரைப் பூவைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இல்லை, பூவினுள் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம் குவிந்த இதழ்கள் ஒவ்வொன்றாய்ப் பிரிந்து கொண்டிருக்கின்றன. அல்லது கவிந்துகொண்டிருக்கின்றன. புதுப் பிறப்புள் புகுந்து புறப்பட்டுக் கொண்டிருக்கிறோம். நினைவுகள் அழகிய இதழ்கள்."

அவள் மேடையினின்று இழிந்து அவன் கால்களை மார்புடன் அனைத்துக் கொண்டாள். சுருதியோசை அவர்களைச் சூழ்ந்து கோட்டை கட்டிக்கொண்டது.

'நீங்கள் என் வாழ்க்கையில் வந்து முளைத்ததை நினைக்கட்டுமா? எனக்கு ஒரே சமயத்தில் நம் வாழ்க்கையில் ஏதேதோ நினைவு வருகிறது.”

'நீ எது நினைத்தாலும் உன் இஷ்டமே என் இஷ்டம்.”

“ஒவ்வொரு நாளும் எத்தனையோ முறை எத்தனையோ விதங்களில் என் வாழ்க்கையில் உங்கள் பிரவேசத்தை நினைத்துக்கொள்கிறேன். இன்னும் எனக்கு அலுப்பு ஏற்படவில்லை."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/213&oldid=1496371" இலிருந்து மீள்விக்கப்பட்டது