பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

பிரிந்து பணியாற்றி வந்தது. ஒவ்வொரு குழுவிலும் ஐந்து உறுப்பினர் இருந்தனர். முதல் குழு கைத்தொழில்களைக் கவனித்து வந்தது. இரண்டாம் குழு வெளிநாட்டிலிருந்து வந்தவர்களின் நலன்களைக் கவனித்து வந்தது; மூன்றாம் குழு பிறப்பு, இறப்புக்களைப் பதிவு செய்து வந்தது. நான்காம் குழு வாணிகத்தைக் கவனித்தும், பண்டங்களின் மீது தீர்வை விதித்தும், முத்திரையிட்ட நிறைகற்களையும், அளவைகளையும் சரிபார்த்தும் வாணிகத்தை முறைப்படுத்தி வந்ததுடன், அரசாங்கத்திற்கும் மிகுந்த வருவாய் தேடிக்கொடுத்து வந்தது. ஐந்தாம் குழு தொழில்களின் மூலம் கிடைத்த பொருள்களைக் கவனித்து, பழைய பொருள்கள், புதியனவாகச்செய்யப்பெற்றவை, நகரத்தில் செய்யப்பெற்றவை, உள் நாட்டில் உற்பத்தி செய்யப்பெற்றவை, வெளியிலிருந்து இறக்குமதி செய்யப்பெற்றவை என்று வணிகர்கள் பிரித்து வைத்து விற்பனை செய்ய ஏற்பாடு செய்து வந்தது. விற்பனைப் பொருள்களின் மீது வரி வாங்கும் பொறுப்பை ஆறாவது குழு ஏற்று நடத்தி வந்தது. விற்பனை விலையில் பத்தில் ஒரு பங்கு வரி விதிக்கப்பட்டதாக மெகஸ்தனிஸ் குறித்துள்ளார். ஆனால், உணவுப் பொருள்கள், காய் கனிகள், விலையுயர்ந்த நவமணிகள், நகைகள் முதலியவற்றிற் கெல்லாம் வெவ்வேறு வகைத் தீர்வைகள் தண்டப் பெற்றன என்று தெரிகின்றது. அரசுக்கு இவ்வருவாய் மிகவும் தேவையானதால், இத்தீர்வை செலுத்தத் தவறியவர்களுக்கும், உண்மை விலைகளை மறைத்தவர்களுக்கும் மிகக் கடு-