பக்கம்:அவள்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாக்ஷாயணி 187

வரப்புக்களின் மேல் தட்டுத் தடுமாறிக் குறுக்கு வழியில் விழுந்தடித்துக்கொண்டு ஓடினேன். சவுக்குத் தோப்பின் உச்சியில் புகைப்படலம் தெரிந்துவிட்டது. மூங்கில் பாலத்தின்மேல் கால் வைத்தேன். வண்டி ஸ்டேஷனை விட்டுக் கிளம்பிக்கொண்டிருந்தது. நீளமாய் ஒரு முறை ஊதிற்று. இன்னொரு முறையும் ஊதிற்று. ஏ அசடே, வழிதப்பிப் போகாதே! இந்தத் தடவை உன்னைக் காப்பாத்தியாச்சு. இங்கேயே விழுந்துகிட என்று கடிவதுபோல் இருந்தது.”

அவளுக்கு மூச்சு இரைத்தது.

அவன் அவள் கையை இழுத்து தன் கையுள் வைத்துக் கொண்டான். அவள் கையை விடுவித்துக் கொள்ள முயன்றாள். 'உஷ்! குழந்தை முழிச்சுக்கறான்!” என்றாள்.

பாபு உடம்பை முறுக்கிக்கொண்டு கண்ணைத் திறந்து, இருந்த இடம் புரியாமல் ஒருதரம் மிரள விழித்தான். தன்மேல் கவிந்த முகங்களை அடையாளம் கண்டு கொண்டதும் அவன் முகத்தில் வெளிச்சம் உண்டாயிற்று. காலை நீட்டி அவள் மடியில் சொகுசாய்ப் போட்டுக் கொண்டான்.

'அப்பா! அம்மாக்கும் உனக்கும் நடுவில் நான் பாலம்’ என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/231&oldid=1496433" இலிருந்து மீள்விக்கப்பட்டது