பக்கம்:அவள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



என் பிரியமுள்ள சிநேகிதனுக்கு 81

பிரார்த்தனையை, எனக்கும் புரியாத சக்தி, கேட்கப் போகிறதா? நான் எதில் சேர்த்தி? சம்போ சங்கரோவா, அம்போ ஐயகோவா? பாஸ்கர் , you lucky guy.

உறவு என்று ஒன்று வேண்டும். இருந்தால்தான் வீடு என்ற களை வரும். நாள் கிழமை, பண்டிகை, பாயஸம், குத்துவிளக்கு, கற்பூரம், நமஸ்காரம், ஆசீர்வாதம், உதயம், மதியம், சாயங்காலம், இருட்டு, விடிவு, கோலம் இவைகளுக்கெல்லாம் அப்பத்தான் அர்த்தமே ஏற்படுகிறது. இதுவரை எனக்கு இதெல்லாம் தோன்றியதில்லை. அதுவே ஒரு ஆச்சரியம்.

அதனினும் ஆச்சரியம், இதோ அனு பக்கத்தில் நானும் கைகளைக் கூப்பிக்கொண்டு உட்கார்ந்திருப்பதைக் காண்கிறேன். இது எப்போது நேர்ந்தது? அவள் வாயினின்று புறப்பட்டுக் கொண்டிருக்கும் நாமாக்கள் மேல் விளம்புவதுபோல, நானும் அவளைப் பின்பற்றி என் நாக்கில் உருட்டி உச்சரிக்க முயல்கையில், அலைகள் என் காலடியில் மண்ணைப் பறித்து, என் பத்திரம் பறிபோய், ஒரு பிரம்மாண்டமான நாக்கு என்னை நக்கி உள்ளுக்கு இழுப்பதுபோல-மாட்டேன். மாட்டேன்--

என்ன மாட்டாய்? எதுதான் உன்னால் மாட்டும்? உன் தோத்திரம் உனக்காக அல்ல, அவனுக்காகவும் அல்ல. தோத்திரம் என்று ஒன்று சொல்ல முயல்கிறாயே. அதுவே போதும். எல்லாம் எனக்காக.

'பாஸ்கர்' இருளில் என்மேல் பாம்பு ஊறல் போன்ற இந்த வசியத்தினின்று முழுமூச்சில் என்னை உதறிக் கொண்டு எழுந்தேன். எழுந்து உன்னிடம் விரைந்தேன்.

பாஸ்கர், நீ காகிதமாய் வெளுத்துப்போயிருந்தாய், உன் உள்ளங்கையைத் தொட்டேன். 'சில்'. உன் மார்பில் காதை வைத்துத் துடிப்பைத் தேடுகிறேன். நாடியும்--கேள்விக்குறிதான்.

அ.6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/125&oldid=1496943" இலிருந்து மீள்விக்கப்பட்டது