பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

அதீனியர்களே வெற்றி பெற்றனர். பின்னர்த் தெமிஸ்டாகிளிஸ், யவனர்களுடைய சிறு கப்பல்களைக் கொண்டு, எதிரிகளின் பெருங் கப்பல்களையும் எதிர்த்து ஓடும்படி ஏற்பாடு செய்தான். பெரும்பாலான பாரசீகக் கப்பல்கள் தகர்க்கப்பட்டன. ஸெர்ஸஸ் மிகுந்த கோபம் கொண்டு குமுறினான். பின்னர் அவன் தளபதி ஒருவனின் தலைமையில் யவனத்தில் ஒரு பெரும் படையை நிறுத்திவிட்டுத் தன் நாடு திரும்பினான். அடுத்த ஆண்டில் எல்லா இராச்சியங்களிலிருந்தும் யவன வீரர்கள் ஒன்று சேர்ந்து அந்தப் படையை முறியடித்து நாட்டை விட்டு வெளியேற்றி விட்டனர்.

அந்நியர் வெளியேறிய பின்னர், யவன இராச்சியங்கள் தமக்குள் மறுபடியும் போரையும் பூசலையும் வளர்த்துக் கொண்டிருந்தன. கடைசியில் ஸ்பார்ட்டப் படையினரே ஏதன்ஸ் நகரைக் கைப்பற்றி அதன் கோட்டை கொத்தளங்களை அழித்து, அதற்குரிய கப்பல்களையும் தீக்கிரையாக்கினர். அதீனியர் எவ்வளவோ நாகரிகம் பெற்றிருந்த போதிலும், சமூக நன்மைக்காக ஒன்று சேர்ந்து போராடும் மனப்பான்மையை இழந்து நின்றனர். தேர்தலும் போட்டியும் வெற்றியுமே அவர்களுடைய தலைவர்களின் இலட்சியங்களாக இருந்தன. அந்தக் காலத்தில்தான்-கிறிஸ்துவுக்கு 400 ஆண்டுகட்கு முன்-ஏதன்ஸ் நகரத்தின் ஒப்பற்ற அறிஞரான ஸாக்ரடீஸைச் சமயப் பற்றில்லாத குற்றவாளி என்று கூறி நீதிபதிகள் அவர் விடம் அருந்தி மாள வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.