பக்கம்:அலைகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98 O லா. ச. ராமாமிருதம்

 நான் சொல்ல வந்தது இதுதான்! சொன்ன பிறகு என் மனம் இன்னும் பெரிதான மாதிரி எனக்கு இருக்கிறது. என்னுள் ஆகாசம் புகுந்துகொண்டாற்போல், நானே இப்போது அதில்தான் மிதந்து கொண்டிருக்கிறேன். உங்களிடம் சொன்னதிலேயே எனக்கு நிறைவு ஏற்படுகிறது.

"நானே தான் பேசிக்கொண்டிருக்கிறேன்; எனக்கே தெரிகிறது. ஆனால், எனக்குப் பேசின மாதிரியே இல்லை. இன்னும் பேச எவ்வளவோ முடியும்.

“உங்களிடம் சொல்லிக் கொண்டு வருகையிலேயே, கேள்விகள் தாமே எழுகின்றன.

“எங்களிருவருக்கும் ஜாதகம் ஒத்திருந்தாலோ?

“அவர் திரும்பி வந்திருந்தாலோ?

இப்பொழுது விமலாவின் கழுத்தில்தொங்கும் மாங்கல்யம் என் கழுத்தில் ஏறியிருந்தாலோ?

“அவர் அவ்வளவு சங்கோசியாயில்லாமல் இருந்திருந்தாலோ?

குளத்தங்கரையில் அவர் என் கையைப் பிடித்திழுத்திருந்தாலோ?

"இக்கேள்விகளுக்கு இப்போநான் என்ன பதில் சொல்ல முடியும்? நான் என் வர்க்கத்திற்கே பேசுவதாய் வைத்துக் கொள்ளுங்கோளேன். எனக்கு வாய்க்கப்போகும் கணவன் இவன்தான் என்று நான் முன்கூட்டி எப்படியறிய முடியும்?

“ஆகையால் எனக்கு வாய்ப்பவன் எவனோ, எவனாயிருந்தாலும் சரி, அவரிடம் நன்றி, விசுவாசம், நாணயம்- இவை விட உயர்ந்து, நிலை நிற்பனவாய், நிச்சயமாய் நான் நிறைவேற்றக்கூடிய பிரமாணிக்கங்கள் எவைகளுக்கு நான் என்னை சமர்ப்பித்துக்கொள்ள முடியும்? மற்றவை தாமே வரும்; வந்தால் வரட்டும். வாராதினும் போகட்டும்! இவை தாம் எனக்கு முக்கியமாய்ப் படுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/100&oldid=1288256" இலிருந்து மீள்விக்கப்பட்டது