பக்கம்:அலைகள்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230 O லா. ச. ராமாமிருதம்


“மாதவா, வா இப்படி உட்கார் மாதவா, ஒண்ணு சொல்லப் போறேன் கோவிச்சுக்க மாட்டயே?’’

சொல்லிக்கொண்டு வருகையிலேயே அம்மாவுக்கு முகம் திட்டாய்ச் சிவந்துவிட்டது. அம்மா நல்ல சிவப்பு.

ஏதுக்கிந்தப் பீடிகை?

“மாதவா, தெருவில் போற பெண்களை உறுத்து முறைச்சுப் பார்க்கிற சுபாவம் ஆண்களுக்கு உடம்போடே பிறந்ததுன்னாலும்-யாரையாவது நீ கையைப் பிடிச்சு இழுத்துட்டேன்னு நான் சொல்லவில்லைஆனால் அதுவும் ஒரு கட்டுலே இருக்க வேண்டாமா? அசலார் எதிரார் என்கிட்டே, ஜாடையாவும் பளிச்சுன்னும், 'ஏண்டி கனகா, நான் என்னென்னவோ கேள்விப் படறேனே? உன் பிள்ளை நடுத் தெருவிலே நின்னுண்டு வழியில் போற சிறிசுகள் பெரிசுகள் எல்லாத்தையும் முழுங்கறாப் போல் பாத்துண்டு நிக்கறானாமே? நான் அதை நம்பறேனான்னு கேக்காதே, என் காதில் விழுந்ததை உன் காதில் போட்டு வைக்கறேன். இருந்தாலும் அவனுக்கும் வயசாயிண்டு வரதோன்னோ, காலா காலத் தில் ஒண்ணைக் கட்டிப் போடறதுதானே! யாராவது பெண் கொடுக்க மாட்டேன் என்கிறாளா? கனகா தலையை அசைக்க மாட்டாளான்னு தானே காத்திண்டிருக்கோம்!' இப்படி அவா என் கிட்டே வந்து சொல்ற போது எனக்கு நாக்கைப் பிடிங்கிக்கலாம் போல இருக்கு.”

நான் ஒன்றும் பதில் பேசவில்லை. அம்மாவின் மடியில் மாதுளையின் பாதிகளிலிருந்து முத்துக்கள் அடுக்கடுக்காய் என்னைப் பார்த்துச் சிரிக்கின்றன. இனிக்கச் சுவைக்கும் ரஸத்தின் நடுவே துவர்க்கும் விதை பத்திரமாய் உட்கார்ந்து கொண்டிருக்கிறது. இனிக்கும் சாறும் துவர்க்கும் ரஸமும் சேர்ந்துதான் முத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/232&oldid=1285667" இலிருந்து மீள்விக்கப்பட்டது