பக்கம்:அஞ்சலி.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காயத்ரீ 165

மேகங்கள் அவசர அவசரமாய் வானை அடைத்துக்கொண்டிருந்தன. நான் காத்துக்கொண்டிருந்தேன். குரூரமாய்ப் பேரிடியொன்று உடைந்தது. சவுக்காலடித்தாற்போல் மரக்கிளைகளிடையில் ஊளையிட்டுக் கொண்டு புயல் புகுந்தது. அம்மாவின் கூக்குரலிட்ட சிரிப்பு புயலையும் ஊடுருவிற்று. நான் துள்ளியெழுந்தேன்.

“பாருங்கோ பாருங்கோ நான் பேசல்லே. என் சத்தியம் பேசறது. அன்னிக்கு எப்படியோ அதேதான் இன்னிக்கு இப்போ. நேரங்கூட இதேதான் இதேமாதிரி தான். முதலில் இலை ஆடாமல் இருந்தது. நீங்கள் உங்கள் அறையில் ராந்தல் வெளிச்சத்தில் ஏதோ ப்ளானைப் போட்டிண்டிருந்தேள். உங்களுக்கு என்னிக்கும் உங்கள் உத்தியோகம், ப்ளான்தான் முக்கியமாக இருந்ததில்லையா?”

“என் உத்தியோகம் என் வயிற்றுப் பிழைப்பு. அது மாத்திரமில்லை. என் குடும்பத்தின் வயிற்றுப் பிழைப்பு. அதாவது குடும்பம், ஈனம் மானம் என்கிற உணர்ச்சி உள்ளவர்களுக்குத்தான் என் வார்த்தை பொருந்தும்—”

“என்னை ஒண்னும் சொல்லாதேங்கோ. அப்ப நான் ஒண்ணும் அறியாதவள்!”

“ஆ!”

“நீங்கள் என்னோடு பேசல்லே—” அம்மாவின் குரல் அசல் பச்சைக் குழந்தையினுடையது மாதிரி ஆகிவிட்டது. அதில் ஒரு மழலை, திகைப்புக்கூட இருந்தது. “நீங்கள் உங்கள் ப்ளானிலும் கணக்கிலும் முனைஞ்சூட்டா வாரக் கணக்கில் பேசமாட்டேள். எனக்கு ஒரு பொம்மனாட்டி துணையாவது இருந்தால் பொருள் படுத்தியிருக்க மாட்டேன். நாம் இருந்த இடம் நடுக்காடு. எதிரும் புதிரும் நீங்களும் நானும்தான். நீங்கள் ஊமையாகிவிட்ட பிறகு நான் என்ன பண்ணுவேன்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/175&oldid=1033478" இலிருந்து மீள்விக்கப்பட்டது