பக்கம்:அலைகள்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

236 O லா. ச. ராமாமிருதம்



போட்டிருந்தேள்னா அவரை இன்னிக்கு நிறுத்தி வைச்சிருப்பேன். ஷட்டகரைப் பார்க்கணும்னு அவருக்கு எவ்வளவு ஆசை தெரியுமா? ஆனால் என்ன பண்றது, மறுபடியும் எப்போ வாய்க்கறதோ அப்போத்தான். நீங்கள் கல்யாணத்துக்கு வராட்டாலும் உங்கள் புண்ணியத்தில் எனக்கு நல்ல இடமாக் கிடைச்சுப் போச்சு. என் வீட்டிலே எல்லாரும் என் மேல் பிரியமாய்த் தானிருக்கா. அங்கே பெண்ணேயில்லை. நான்தான் செல்லப்பெண். எதுக்காவது நான் பதில் பேசினால் அம்மா என்னை முறைக்கிறாள். 'எல்லாம் உனக்குப் புகுந்த இடத்தில் கொடுத்திருக்கிற இடண்டீ'ன்னு. எனக்குப் பிறக்கப் போறது பெண்ணாயிருந்தால் அதைக் கண்டு அஸிகைப்படறது முதல் நான் தான். செல்லத்துக்கு என் இடத்தை அது புடிச்சுண்டுடுமே! என்ன அத்திம்பேரே உங்களுக்கு ஆச்சரியமாயிருக்கோ? என்னடாது மச்சினி இத்தனை வெகுளியாயிருக்குன்னு! என்ன பண்ணறது ஒத்தரையொத்தர் பாத்துக்கறதே மாமாங்கத்துக்கு மாமாங்கம்னு இருந்தால் அப்படித்தான் ஆகும். என்ன பண்றது எனக்கோ உடன் பிறந்தான் இல்லை. நீங்கள் தான் எனக்கு அண்ணா உங்கள் கிட்டக் கொட்டி ஆத்திக்கறேன்-"

எங்கோ நெஞ்சின் அடிவாரத்திலிருந்து எப்போ கேட்ட மாதிரி ஒரு குரல் செவியண்டை எழுகிறது.

“இவன் பெண் சாதி உன் தங்கச்சி மாதிரி."

எச்சரிக்கைக்கு எச்சரிக்கை. புத்திமதிக்குப் புத்திமதி.

நெஞ்சுக்கு நேரே ஒரு கையில் கத்தியைப் பிடித்துக் கொண்டு, இன்னொரு கையால், தன் உரிமையின் கேலியில் என் முகத்தை வருடுகிறான்.

“உன் கண்ணில் பட்டால் இப்படித்தான் படுவேன்” என்கிறாளா?

தெரு முனையில் வெங்கிட்டுவின் உரத்த குரல் கேட்கிறது.

***

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/238&oldid=1286152" இலிருந்து மீள்விக்கப்பட்டது