பக்கம்:அஞ்சலி.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156 லா. ச. ராமாமிருதம்

கன்றைக் கண்டதுமே தாயின் முலைக்காம்பில் துளிக்கும் பால்போல் ஒசைத்துளிகள் முத்து முத்தாய் மெத்து மெத்தென எழுந்தன.

“நான் என்னத்தையோ நினைச்சுண்டேன்.”

அவள் குரல் உள்ளடங்கிப் போயிற்று.

மாவிலைகள் சலசலத்தன.

“அம்மா நான் சிறந்த பாடகனாகப் போகிறேன்—”

மாமரத்தில் ஒரு பட்சி “கிள்கிள்” என்றது.

உள்வலியில் அவள் குரல் சுளித்தது.

“நீ பாடகனானால் எனக்கு ஒண்னும் அதிசயமில்லே.”

“ஏன்?”

“உனக்குக் குரல் இருக்கு, ஞானமும் இருக்கு. என் வழி வாசனையுமிருக்காதா? ஆனால், அப்பா உன்னை விட மாட்டார்.”

“ஏன் ?”

“அதில் பிழைப்பில்லை.”


“இல்லாவிட்டால் போகிறது. இஷ்டம் இருக்கே!”

“இஷ்டம் இருந்தால் மாத்திரம் போதுமா?”

“இந்தமாதிரி விஷயங்களில் இஷ்டம்தான் பெரிசு.”

“வால்மீகி, அப்பா சொல்றது சரிதான்.”

“என்னது அம்மா?”

“வால்மீகி, அப்பா உன்னை விடமாட்டார்.”

“ஏன்?”

“ஏன்னா, நீ என்னைக்கொண்டு பிறந்திருக்கே.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/166&oldid=1033472" இலிருந்து மீள்விக்கப்பட்டது