பக்கம்:அவள்.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அபூர்வ ராகம் 319

ஆசை. விதவிதமாய்ப் பூ வாங்கி வைத்துப் பின்னுவாள். பின்னி முடிவதற்குள் தோள்பட்டை விட்டுவிடும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு பாடு, தலைக்கு மாத்திரம் எண்ணெய் தனியாய்த் தேய்த்து, துணி துவைப்பதுபோல் அம்மிக்கல்லின் மேல் கூந்தலைக் குமுக்கி ஒரு கட்டையால் எண்ணெய் விட அடித்து அலசுவாள். உலர மறுநாளாகும். கூந்தலை முடித்துப் படுக்க இயலாது. முடிச்சை அவிழ்த்துக் கட்டிலுக்கு வெளியே தொங்க விட்டுத்தான் படுக்க வேண்டும்

ஓரிரவு விழித்துக்கொண்டேன். மயிர் பெருந்தோகையாய் படர்ந்திருந்தது. மெதுவாய்த் தொட்டேன். சரியாய் மூன்றங்குல ஆழத்திற்குக் கை அழுந்திற்று. விடிவிளக்கின் மங்கிய வெளிச்சத்தில் அதைப் பார்த்தால் ஏதோ எங்கேயோ, வறண்ட பூமியில் குன்றுகள் தடுத்துக் குடங்குடமாய்ப் பெய்ய ஏகமாய்த் தண்ணீரை ஏற்றிக் கொண்டு செல்லும் மேகம்போல்.

அவள் முகத்தில் தவழ்ந்த புன்னகையிலிருந்து அவள் விழித்துக் கொண்டு விட்டாளென்று கண்டேன். ஆனால் கண்ணைத் திறக்கவில்லை.

"என் கவி என்ன யோசனை பண்ணுகிறது?’’

நான் அவளை ராகம் என்பதால் அவள் என்னைக் கவியென்று கேலி செய்வாள்.

'பெருத்த யோசனைதான்!”

என்னவோ?’’

'உன் மயிர் உன்னைவிடக் கறுப்பா, அல்லது நீ அதை விடக் கறுப்பா?”

கண்ணை விழிக்காது அவள் புன்னகை புரிவது எவ்வளவு அழகாயிருக்கிறது. சின்னக் குழந்தை தூக்கத்தில் சிரிப்பது போன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/363&oldid=1497936" இலிருந்து மீள்விக்கப்பட்டது