பக்கம்:அலைகள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138 O லா. ச ராமாமிருதம்

 உலகத்தின் நடைப்பாதையில் உட்கார்ந்து-நின்று - உலகத்தின் நடிப்பைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன். நான் கிழவனா? குமரனா?

கிழவன் தேவலை,

எனக்கு அப்பவே தோன்றும். தங்களிடம் இல்லாத எதைத்தேடி இவர்கள் கோவிலுக்குப் போகிறார்கள்? குறை பட்டவர்களுக்குத்தானே கோவில்?

பிறகு சேர்ந்தாற்போல் ஒரு வாரம் அவர்களை காணோம்.

வேளையே வெறிச்சிட்டது.

பிறகு ஒரு நாள் வீட்டுக்குள்ளிருந்து வெளி வருகையில் கடையண்டை நின்று அவள் மாத்திரம் அப்பாவுடன் பேசிக் கொண்டிருந்தாள். முகத்தில் கவலை தோய்ந்திருந்தது. அப்பா ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்.

“ஒண்ணும் நேராது, கவலைப்படாதே, அம்மா. மனிதன் என்று பிறந்தால் ஜூரம், தலைவலி, நோய் நொடி கண்டு தெளிந்து எழுந்திருப்பது எல்லாம் சகஜம்தானே? நம்மை இரும்பாலா அடித்துப் போட்டிருக்கிறது? கவலைப் படாதே, ஒண்ணும் நேர்ந்துவிடாது"

இதைக் கவனித்திருக்கிறீர்களா?

ஒவ்வொருவரின் சிறப்பு அல்லது அழகு ஒரு குறித்த சூழ்நிலையில்தான் பரிணமிக்கிறது. ஒரு ஒரு முகம் கோபத்தில் குறுகுறுக்கிறது. சில முகங்கள் பயத்தில் களை கட்டுகின்றன. அபிதா அப்போது கையைப் பிசைந்துகொண்டு நிற்கையில் அவள் முகம், தோற்றம் முழுதிலுமே அமானுஷ்ய அழகு பொலிந்தது. ஆகையால் எந்த நிலையில் ஒரு அழகு பரிமளிக்கிறதோ அதே சூழ்நிலையில் அந்த அழகை கண்டுகொண்டிருக்க விரும்பும் எண்ணம் நல்லதா, கெட்டதா? ரஸிகத் தன்மையின் விபரீதமா? அல்ல, உண்மையே அப்படித்தானா? நீங்கள்தான் சொல்ல வேணும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/140&oldid=1288528" இலிருந்து மீள்விக்கப்பட்டது