பக்கம்:அலைகள்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அலைகள் O 231


இதுவும் அவள் சிரிப்புத்தான். "என்னைக் கண்டு பிடிக்க முடிந்ததா பார்!" என்று என்னைப் பின் மண்டையில் ஓங்கித் தட்டிவிட்டு, மாதுளையில் புகுந்துகொண்டு சிரிக்கிறாள். அம்மா மடியில உட்கார்ந்து கொண்டு என்னை கருடா சுகமா?’ என்று கேட்கிறாள்,

தலை சுற்றுதிறது. மண்டையை இரு கைகளாலும் பற்றிக் கொள்கிறேன்.

***

நான் கண்ணால் கண்டிராது, யார் என்றுகூட வெறும் உணர்வில் மாத்திரமேகூட அறியாது, அவள் என் நினைவுள் புகுத்து பீடத்தைப் பற்றிச் கொண்டபின், நான் என் பாதியை உணர்கிறேன்.

பாதியிலும் விபரீதமான பாதி. துண்டாய்த் தனித்திடினும், அதற்கு உயிரற்றாலும். அதன் சாவிலேனும் அதற்கு முழுமையுண்டு. என் நிலையோ, உயிரிலே பாதி சாவிலே பாதியுடன் கலந்து ஊசலின் முழுமையில், ஊசலாடுகிறேன். -

கண்ணாடியுள் அகப்பட்டுக்கொண்ட பிம்பமாய், வெளி வர இயலாது தவிக்கிறேன்,

ஆயிரம் ஆயிரம் சித்திரங்கள், கோலங்கள் நெஞ்சில் பிறந்து விட்டு, தம் உருப்பெற சுவர் தேடித் தவிக்கின்றன.

கீழே சீறும் வெள்ளத்தின்மேல் ஆடும் பாலத்தின் அறுந்த நுனியில் தொங்குகிறேன்.

அதனால், எதனால் தான் அவளுக்கென்ன? நான் அவள் முள்ளில் மாட்டிக் கொண்டவன், அவள் இஷ்டத்திற்கு எந்நேரம் தேணுமானாலும் அவள் என்னுடன் என்னைத் தூண்டிலில் விளையாடலாம். அவள் கரையில் உட்கார்ந்திருப்பவள், காலம் கடந்தவள். காலத்தைப் பற்றி அவளுக்கென்ன கவலை?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/233&oldid=1285668" இலிருந்து மீள்விக்கப்பட்டது