பக்கம்:அவள்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170 லா. ச. ராமாமிருதம்




'உனக்கும் எனக்குமிடையில் இந்நிலையில் அலுப்பு என்பது இல்லை.”

"அது மாத்திரம் அல்ல. நினைத்ததையே நினைத்துக் கொள்வதில், நினைத்ததைச் சொல்வதில் இன்பமாக இருக்கிறது. ஒரொரு சமயமும் ஒரொரு புது அர்த்தம் தோன்றுகிறது. நிஜம்மா, இதைப்பத்தி உங்களிடம் சொல்றப்போ எனக்கு நாக்கு தொண்டை வரை தித்திக்கிறது.'

"உன் சொல்ருசியில் என் நாக்கிலும் எச்சில் ஊறுகிறது.

"நான் காலேஜிலிருந்து அப்போதுதான் வீட்டுள் நுழைந்தேன். ஆபீஸ் ரூமிலிருந்து அப்பா கூப்பிட்டார். நான் உள்ளே வந்தேன். வந்தது உங்கள் முகத்தைக் காணவில்லை. முதுகைத்தான் கண்டேன். சுவரில் மாட்டியிருந்த படத்தை சிந்தித்துக்கொண்டிருந்தீர்கள். முதுகின் பின்னால் கோத்த உங்கள் கைகளைக் கண்டேன். உங்கள் கையைக் கொடுங்களேன்! பற்றி இழுத்து இரு கைகளிலும் பொத்திக்கொண்டாள். 'கையைப்பற்றிப் பேசுகையில், கையைத் தொடணும் போல் ஏக்கமே ஏற்படுகிறது.” 'தாக்ஷாயணி, இவர் தான் உன் பாட்டு வாத்தியார். இவரிடம் உன்னைப்பற்றி ரொம்பவும் சொல்லியிருக்கிறேன்.'

'நான் கை கூப்பினேன். நீங்கள் நின்ற நிலை மாறவில்லை. ஆனால் மெதுவாய் முகம் மாத்திரம் என் பக்கம் திரும்பிற்று. இறைஞ்சலில் ஏந்திய என் கைகள் இறங்க மறந்தன.

"என் முகத்தில் அப்போது நீ என்ன கண்டாய்? தயவு செய்து சொல்லேன்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/214&oldid=1496374" இலிருந்து மீள்விக்கப்பட்டது