பக்கம்:அவள்.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

428 லா. ச. ராமாமிருதம்

பாரேன்!'-என்னைப் பார்த்துச் சிரித்தனர். ஆனால் இது இனி சிரிக்கும் விஷயமில்லை என்று எனக்குத் தெரிஞ்சு போச்சு.

கண் டாக்டரிடம் காண்பித்ததில், கண்ணில் ஏதும் கோளாறு தெரியவில்லை. நரம்பு நிபுணருக்குச் சிபாரிசுக் கடிதம் கொடுத்தார். தனியாத்தான் போனேன்.

எல்லாப் பரிசீலனைகளும் நடந்தன.

மூளையில் சிக்கலான இடத்தில் ஒரு நரம்பில் அடைத்துக் கொண்டிருக்கிறது. அதனால்தான் பார்வை அடைப்புகள். என் வயது ரண சிகிச்சையை அனுமதிக்க வில்லை. மருந்து மாத்திரைகளில், என் அதிர்ஷ்டத்தில், clot கரைந்தால் அல்ல ஒதுங்கினால் உண்டு. இல்லாவிட்டால் நான் எதற்கும் தயாராயிருக்கணும். நிரந்தரமாய்ப் பார்வை இழப்பு. stroke, Thrombosis.”

"இதோ பாருங்கள் இதெல்லாம் நேரணும்ங்கற அவசியமில்லை. இப்படியே வண்டி ஒடிக் கொண்டிருக்கலாம், அதே சமயத்தில், எப்பவேனுமானாலும்—அவள் மேல் பார்த்தைப் போட்டுவிட்டு இருங்கள்—"

"மது, நான் யாரிடமும் சொல்லவில்லை. இப்போ உனக்கு மட்டும்தான் தெரியும்."

"அண்ணாவிடம்? அவனுக்குத் தெரிய வேண்டாமா?"

கசந்த புன்சிரிப்பில் அவர் கீழுதடு பிதுங்கிற்று.

"அவனிடம் சொல்வியும் ஒன்றுதான், சொல்லாமலும் ஒன்றுதான். சொன்னால் என்ன சொல்வான் தெரியுமா? நானே சொல்கிறேன். 'டாக்டர் செலவை ஏற்றுக் கொள்ளலாம். என்னால் வேறென்ன செய்ய முடியும்? அவனுடைய பயங்கர யதார்த்த வாதத்தில் மனிதத் தன்மையையே இழந்துவிட்டான். கடவுள் எப்படி எப்படியோ படைக்கிறார். இதோ பார் மது, நீ அவளிடம் கூட சொல்லவேண்டாம்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/472&oldid=1497679" இலிருந்து மீள்விக்கப்பட்டது