பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6

 தான் காத்து வைத்துள்ள பொற்குவியல்தனைக் கொண்டு தானேயன் அணிகலனைச்செய்து நிலமாது பூட்டிக்கொள்கின்றாள்? இல்லை, மற்றையோர் பெற்றிடத் தருகின்றாள்.

ஒளிதனை உமிழ்ந்திடும் திருவிளக்கு எதற்காக ? இருளில் உள்ளோர் இடர் நீக்க.

பட்டம் பெற்றிடும் சிறப்புடையீர்! நீவிர் திருவிளக்கு, பொற்குவியல், புள்ளிக் கலாப மயில், கார்மேகம், நாட்டைச் செழிக்கச் செய்திடும் வல்லுநர்கள். இசைபாட மக்கள் உமது ஆற்றலை ஈந்திட வந்துள்ளீர். இதற்கான அனுமதிச் சீட்டே இந்தப் பட்டங்கள். இத்தகையோரைப் பயிற்றுவித்துக் கொடுப்பதே பல்கலைக்கழகத்தின் தனிச்சிறப்பு.

நாட்டின் பொதுவுடமை நீவீர்! இன்று நமக்கென்று பெற்றுள்ள நற்பட்டங்கள் மறந்திடுவோர் அல்லர் நீவீர். எனினும், எடுத்துரைக்க வந்துள்ளேன், இயம்புகின்றேன்.

எந்நாடாயினும் இடரினும் இழிவிலும் படாமல் இருளகன்று ஏற்றம் பெற்று இருந்திட வேண்டுமெனில், அந்நாட்டினில் தொடர்தொடராய் அறிவாளர் தோன்றிய வண்ணம் இருந்திட வேண்டும். நன்றிது, தீதிது, நமதிது, பிறர் தந்ததிது, மரபிது, மருளிது என்பதனை ஆய்ந்தறிந்து கூறுவதற்கும், அவ்வழி நடந்து மக்கள் மாண்பினைப் பெற்றிடச் செய்வதற்கும் ஆற்றல்மிக்க அறிவுப்படை எழுந்தபடி இருக்க வேண்டும். அதற்கான பயிற்சிக்கூடம் வேறெதுவாய் இருந்திடமுடியும்? இஃதே அப்பயிற்சிக்கூடம், பல்கலைக் கழகம். நாடு பல்வளமும் பெற்றிடும் நற்கலையைக் கற்றிட அமைந்துள்ள நக்கீரக்கோட்டம்

1964-66 ஆம் ஆண்டுத் தேசியக் கல்விக்குழுவினர் இதனை வலியுறுத்திக் கூறியுள்ளனர். எவருக்கும் கட்டுப்படாமல், இழுப்பார் பக்கம் சாய்ந்துவிடாமல் சிந்தித்து உண்மையறிந்து, அறிந்ததனை விளக்கமுடன் எடுத்துரைத்து ஆளடிமையாகாமல் அச்சமற்று நிற்போரை அளிப்பதற்கே பல்கலைக்கழகம் என்னும் கருத்துப்பட அக்குழுவினர் கூறி யுள்ளனர்.