பக்கம்:அவள்.pdf/550

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

506 லா. ச. ராமாமிருதம்



திடீரென மாடிவளைவில் பாட்டி தோன்றுகிறார். விமானத்தில் சுவாமியை எழுப்பினாற் போல் நாற்காலியில் அவர் இருக்க, அம்மாவும் அப்பாவும் இரு பக்கங்களிலும் நாற்காலியைப் பிடித்துக்கொண்டு வெகு ஜாக்கிரதையாய், மெதுவாய், கீழே இறங்குகிறார்கள், பிறகு பத்திரமாய் அப்பா பாட்டியை இரு கைகளிலும் வாரித் தூக்கிக் கொண்டுபோய் மனைமீது உட்காத்தி வைக்கிறார். அப்பா பிடித்துக்கொண்டிருக்க, அம்மா. பதச்சூட்டில் வெந்நீரை மொண்டு மொண்டு ஊற்றி, பாட்டி உடம்பைத் தடவினாற்போல தேய்க்கிறார். நாங்கள் எல்லோரும் சுற்றி நின்று பார்க்கிறோம்.

இது ஆதாரனை இல்லாது எது? ஆமாம், பாட்டியின் உடல் நிலை அடிக்கடி குளிப்பதற்கில்லை, எந்த சாக்கில் மாரில் சளி தாக்கிவிடுமோ எனும் பயம். உத்ஸவருக்கு விசேஷ நாட்களில் மாத்திரம் அபிஷேகம் நடப்பது போல், பாட்டிக்கு, நாள், கிழமை, பண்டிகை தினம் போதுதான், சர்வ ஜாக்கிரதையாய்க் குளிப்பாட்டு நடக்கும். சற்று அழுத்தித் தேய்த்தால் எங்கே கையோடு சதை பிய்ந்து வந்துவிடுமோ எனும்படி உடல் அவ்வளவு நளினம். அந்த உடலில், மானம் வெட்கம் எனும் உணர்ச்சி விகாரங்களுக்கு எங்கே இடம் இருக்கிறது? எந்த நேரத்தில் இந்த உடல் விலங்கைக் கழற்றி எறியப் போகிறோம் என்றுதான் அந்த உயிர் காத்துக் கொண்டிருக்கிறதே! மரம் சாய்ந்துவிட்டாலும் வேர்கள் பூமியிலிருந்து கழலமாட்டேன் என்கின்றன. பாட்டி நூறு தாண்டியாச்சென்று நினைக்கிறேன். வருடங்களின் ஸ்புடத்தில், அங்கங்கள், சுக்காய் உலர்ந்து, உடலே சுண்டிய உருண்டை ஆகிவிட்டது.

பாட்டியின் உடம்பைத் துவட்டி அவர்மேல் புடவையை மாட்டி நாற்காலியில் வைத்துக் கூடத்து வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறார்கள். நாங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/550&oldid=1497348" இலிருந்து மீள்விக்கப்பட்டது