பக்கம்:அவள்.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

396 லா. ச. ராமாமிருதம்

"எப்போ?” (குழந்தைபோல்!)

"இன்று வந்த நேரத்துக்கு."

எழுந்து நின்றார். அவளும் எழுந்துகொண்டாள். சட்டென்று எட்டி அவள் உதடுகள் அவர் கன்னங்களை ஒற்றின.

மின்சாரம் மெத்தென்றுதான் தொடும்.

அவரை ஆகாயத்தில் தூக்கி எறிந்து நக்ஷத்ரங்களிடையே மாட்டிக் கொண்டுவிட்டார்.

அவர் தன்னில் இல்லை. செல்லும் திக்கும் வழியும் ஆடி, சிறகுகள் மீது மிதந்து சென்றார்.

அவளுக்கு விஜிடபிள் கட்லெட் செய்ய வரும். அவர் வரவேளைக்குச் சூடாயிருக்கணும். வரவேளைதான். கட்லெட்டில் பல் அழுந்தறப்போ சூடு, பல் இகருக்கு அத்தினி சுகமாயிருக்கணும்.

டிபனைத் தயார் செய்துவிட்டு, தெரு வாசலுக்கு இருமுறை சென்று வந்தாள். பிறகு சூடு இறங்காமல் இருக்க, கட்லெட் ஏனத்தைக் கொதிக்கிற வென்னீரில் இறக்கி மூடினாள்.

டிகாஷன் எப்பவோ இறங்கி, பாலும் புடைச்சுப் போச்சு மறுபடியும் தெருவுக்கு வந்து பார்த்தாள். சொன்ன நேரம் எப்பவோ கடந்துவிட்டது. அஸ்தமன இருள் இறங்கிவிட்டது. உள்ளே வந்தாள்.

சுவர்க்கடிகாரத்தில் வினாடிகள் தாளித்துக்கொண்டிருந்தன.

சுவரோரமாய்ச் சாய்ந்து முழங்கால்களைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்துவிட்டாள்.

இப்பவும் வரலாம். எப்பவேனும் வரலாம். பல்லி சப்தித்தது.

ஊன்றிய செவிக்கு அலையிரைச்சல் எட்டக் கேட்டது. அலைகள் ஒய்வதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/440&oldid=1497336" இலிருந்து மீள்விக்கப்பட்டது